முதல்வர் காப்பீட்டை ஏற்க மருத்துவமனை மறுப்பு : ரூ.3.64 லட்சத்துடன் ரூ.50,000 இழப்பீடு தர உத்தரவு
முதல்வர் காப்பீட்டை ஏற்க மருத்துவமனை மறுப்பு : ரூ.3.64 லட்சத்துடன் ரூ.50,000 இழப்பீடு தர உத்தரவு
ADDED : மே 20, 2024 05:02 AM

சென்னை: 'முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஏற்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம், இதய அறுவை சிகிச்சைக்காக பெற்ற, 3.64 லட்சம் ரூபாய் கட்டணத்தை, 50,000 ரூபாய் இழப்பீட்டுடன் சேர்த்து வழங்க, திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூர் காலடிபேட்டையை சேர்ந்த மோகன் என்பவர், தாக்கல் செய்த மனு:
கடந்த, 2016 முதல் இதயத்தில் சிறியளவில் பிரச்னை இருந்து வந்தது. இதற்காக, சென்னை ஷெனாய் நகரில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில், 2018 டிச., 26 இதய அறுவை சிகிச்சைக்கு சேர்ந்தேன். மறுநாள் அறுவை சிகிச்சை முடிந்தது.
முதல்வர் மற்றும் பிரதமரின் மருத்துவ காப்பீட்டுக்கான அட்டையை சிகிச்சைக்கு முன் வழங்கினேன்.
அறுவை சிகிச்சைக்கு, முதல்வர், பிரதமரின் காப்பீடு அட்டைகள் ஏற்கப்படும் என்ற அறிவிப்பு, மருத்துவமனை வளாகத்தில் ஒட்டப்பட்டு இருந்தது.
இருப்பினும், இதய அறுவை சிகிச்சைக்கு பின், காப்பீடு திட்ட அட்டைகள் ஏற்கப்படாது எனக்கூறி, 3 லட்சத்து, 64,673 ரூபாய் கட்டணம் வசூலித்தனர்.
அறிவிப்புக்கு மாறாக, காப்பீடு திட்ட அட்டைகளை ஏற்காதது சேவை குறைபாடு; நியாயமற்ற வணிக நடவடிக்கை. எனவே, மன உளைச்சல் ஏற்படுத்திய மருத்துவமனை நிர்வாகம், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை, திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் எஸ்.எம்.லதா மகேஸ்வரி, உறுப்பினர்கள் பி.வினோத்குமார், பி.முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் நபர், காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெறுவதற்கான தகுதி பற்றி, வெளிப்படுத்தி இருப்பார்.
காப்பீடு திட்டங்களின் கீழ் தான் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக, புகார்தாரர் அல்லது அவரது உதவியாளர் என யாரும் தெரிவிக்கவில்லை என்ற மருத்துவமனை தரப்பு வாதத்தை ஏற்க முடியாது.
பணம் செலுத்தும் முறை, நோயாளியின் காப்பீட்டு திட்டத்தின் உரிமை உள்ளிட்டவை குறித்து, மருத்துவமனை அல்லது மருத்துவமனை சார்ந்த உயர் அதிகாரிகள் தான் விசாரிக்க வேண்டும்; இது கடமை. அறுவை சிகிச்சை குறித்தோ, மருத்துவர் மீதோ, எவ்வித குற்றச்சாட்டையும் கூறவில்லை.
மருத்துவமனை தரப்பு சேவை குறைபாடு புரிந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. எனவே, சிகிச்சைக்கு செலுத்திய கட்டணம், 3 லட்சத்து, 64,673 ரூபாயை புகார்தாரருக்கு திருப்பி அளிக்க வேண்டும்.
மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு, 50,000 ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவாக, 5,000 ரூபாயையும், மருத்துவமனை நிர்வாகம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

