UPDATED : மே 02, 2024 11:14 PM
ADDED : மே 02, 2024 11:11 PM

சென்னை : தமிழகம், புதுச்சேரி உட்பட ஒன்பது மாநிலங்களுக்கு, அனல் காற்று அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 111 டிகிரி பாரன்ஹீட்டை வெயில் தாண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும், கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நேற்று முன்தினம், தமிழகம், புதுச்சேரியில், 21 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
இதைத்தொடர்ந்து, நேற்றும் காலை முதல், அனைத்து மாவட்டங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பல இடங்களில் மித வேகத்தில் வெப்ப அலை வீசியது.
கரூர் 112 டிகிரி
தமிழகம், புதுச்சேரியில் நேற்று, 18 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மாநிலத்தில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில், 44.3 டிகிரி செல்ஷியஸ் அதாவது, 112 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியது.
சென்னை நுங்கம்பாக்கம், காரைக்கால், 38 அதாவது 100.4 டிகிரி பாரன்ஹீட்; நாகை, 39; பாளையங்கோட்டை, மீனம்பாக்கம், கோவை, தஞ்சாவூர், 40; திருப்பத்துார், சேலம், தர்மபுரி, நாமக்கல், மதுரை நகரம், மதுரை விமான நிலையம், திருத்தணி, 42; திருச்சி, 43; வேலுார், ஈரோடு, 44 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.
கொடைக்கானல், 26; குன்னுார், ஊட்டி, 29; வால்பாறை, 32; பாம்பன், பரங்கிப்பேட்டை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, புதுச்சேரி, 36; கடலுார், தொண்டி, 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
'ஆரஞ்சு அலெர்ட்'
இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி உட்பட ஒன்பது மாநிலங்களுக்கு, வெப்ப அலை மற்றும் அனல் காற்று அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது தொடர்பான, 'ஆரஞ்சு அலெர்ட்' ஜார்க்கண்ட், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கம், பீஹார், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடலோரம் அல்லாத வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களில், வெப்ப அலை மற்றும் அனல் காற்று அபாயத்திற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல், 6ம் தேதி வரை, தமிழக உள் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளது. வடக்கு உள் மாவட்டங்களில், 111 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 44 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்ப நிலை பதிவாகலாம்.
சென்னையில் அதிகபட்சம், 41 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வெயில் கொளுத்தும் நேரத்தில், பகலில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும், அடிக்கடி குடிநீர் அருந்துமாறும், நீர்ச்சத்து மிக்க பானங்களை உட்கொள்ளுமாறும், வெயிலில் செல்வதை தவிர்க்கும்படியும், வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திஉள்ளது.
ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதிகளில், இன்று முதல், 5ம் தேதி வரை மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
நேற்று பகலில் வேலுார், குடியாத்தம் பகுதியில், ஆலங்கட்டி மழை பெய்து மக்களை குளிர்வித்தது.