வானதியை கிண்டல் செய்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி... கோரிக்கையை முன்வைத்த கோவை ஹோட்டல் உரிமையாளர்!
வானதியை கிண்டல் செய்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி... கோரிக்கையை முன்வைத்த கோவை ஹோட்டல் உரிமையாளர்!
UPDATED : செப் 12, 2024 09:07 AM
ADDED : செப் 12, 2024 08:51 AM

கோவை: ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு குறித்து ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சீனிவாசன், அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விவரித்த விதம், கோவை கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகள், சிறு, குறு தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கலந்துரையாடினார். இதில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் பங்கேற்றார். அப்போது, பல்வேறு தொழிலதிபர்கள், தங்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எடுத்துரைத்தனர்.
கலகலப்பு
அப்போது, மிக்சர், ஸ்வீட் மற்றும் உணவுகளுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி., வரி பற்றி தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும், கோவை அன்னபூர்ணா உணவக குழும தலைவருமான சீனிவாசன் பேசியது அங்கிருந்தவர்களை கலகலப்பாக்கியது.
அவர் கூறியதாவது: ஒவ்வொரு பொருளுக்கும் வித்தியாசம் வித்தியாசமாக ஜி.எஸ்.டி., போடுவது பிரச்னையாக இருக்கிறது. பன்னுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது. அதில், கிரீம் வைத்தால் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வருது. இதனால், வாடிக்கையாளர்கள் பன்னையும், கிரீமையும் கொண்டு வாருங்கள், நாங்களே வச்சுக்கிறோம் என சொல்றாங்க. அனைத்திற்கும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி.,யை நிர்ணயிக்க வேண்டும்.
உங்க பக்கத்துல இருக்கிற எம்.எல்.ஏ., (பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி) எங்க கடையின் ரெகுலர் கஸ்டமர். அவங்க வர்றாங்க.. ஜிலேபி சாப்பிடுவது, அதுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி., அப்புறம் காபி காரம் சாப்பிடுவது, காரத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி., என்றால் சண்டைக்கு வராங்க. இது தினமும் நடக்கிறது. ஒரே பில்லில் ஒரே குடும்பத்திற்கு வெவ்வேறு மாதிரி ஜி.எஸ்.டி., போட்டுக்கொடுப்பது கஷ்டமாக இருக்கு.
ஸ்வீட்
அதுமட்டுமில்லாமல், வடமாநிலத்தில் இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி.,யும், காரத்திற்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி.,யும் விதிக்கப்படுவதாக உங்க பக்கத்தில் இருக்கும் எங்க தொகுதி எம்.எல்.ஏ., கூறுகிறார். கடையே நடத்த முடியலைங்க மேடம் எல்லாத்துக்கும் ஒரே மாதிரி ஜி.எஸ்.டி.,யை உயர்த்தினால் பரவாயில்லை. ஒரே மாதிரியா பண்ணுங்க. ஒரு ஃபேமிலி சாப்பிட்டு விட்டு திரும்பினால், பில் போடுவதற்கு கம்ப்யூட்டரே திணறுதுங்க. எனவே தயவு செய்து இதனை பரிசீலனை செய்யுங்கள், எனக் கூறினார்.
ஹோட்டல்
தொடர்ந்து பேசிய அவர், ஜி.எஸ்.டி., அதிகாரிகள், இன்புட் கிரெடிட் எடுக்கும் பொழுது, அதே கிச்சன், அதே கடலை மாவு, அதே மைதா மாவு, அதே ஸ்வீட் மாஸ்டர் என இருக்கும் பொழுது, அதிகாரிகளே திணறுகிறார்கள். அவர்களுக்கும் உதவி பண்ணுங்க . திருச்செந்தூர் சூரசம்ஹாரம் மாதிரி ஏதேனும் நிகழ்வு வரும் போது, வருஷத்துல ஏதாவது ஒரு நாள் தான் ஹோட்டல்களில் ஒரு அறைக்கு 7500 என பில் போடுகிறோம். கூடுதல் பெட் கொடுத்தால் ரூ.1,000 சேர்த்து பில் பண்ணுவோம். அதுவும் தற்போது ஹோட்டல்களின் அறை கட்டணங்களை மேக் மை ட்ரிப் தான் நிர்ணயிக்கிறது. ஒரு நாள் 7500 பில் போட்டதற்கு ஆண்டு முழுவதும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., போடுகிறார்கள். இதனை கட்டாயம் பரிசீலனை செய்ய வேண்டும், என்றார்.
கோவை எம்.எல்.ஏ., வானதியும் மேடையில் அமர்ந்திருந்த போது, கோவைக்கே உரிய பாணியில் கோரிக்கையை நகைச்சுவையுடன் முன்வைத்தது, அரங்கில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.