UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 10:14 PM

மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை:
துபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற விமானத்தில் நடந்த திகில் சம்பவத்தில், பல உயிர்களை காப்பாற்றியுள்ளாரே இந்திய விமானி?
விமானத்தில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களையும், இஸ்ரேலையும் தாக்க செய்யப்பட்ட சதி என்கிறது இஸ்ரேல். இந்திய விமானி ஸ்மிட் மச்சார், தன் உயிரை துச்சமென கருதி, நுாற்றுக்கணக்கானோர் உயிரைக் காப்பாற்றியுள்ளார். நிஜ வீரர் அவர்!
எம்.பாஸ்கர், தஞ்சாவூர்:
‘தமிழகத்தில் ஏதாவது ஒரு மாற்றம் பார்த்து இருக்கிறீர்களா?’ என்று கேள்வி கேட்கிறாரே பிரேமலதா விஜயகாந்த்?
விஜயகாந்தின் கொள்கைகளை முற்றிலுமாக மறந்தும், மறைத்தும், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்த, தே.மு.தி.க., பிரேமலதாவின் மாற்றத்தை தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே!
வ.வேலவன், புதுச்சேரி:
‘தமிழகத்தில் சில விஷயங்கள் இன்னும் சீரடைய வேண்டி இருந்தாலும், தற்போதைக்கு மாநில முதல்வர் விஜய் சிறப்பாக செயல்படுகிறார். அவர் குறித்து எங்களுக்கு நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் தமிழகத்திற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்’ என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனரே?
நல்ல விஷயம் தான்... விஜய், இனி தன்னை சுற்றியுள்ளவர்கள் தவறேதும் செய்யாமல், அரசை கட்டிக்காத்து, சட்டம் – ஒழுங்கையும் சீர் செய்ய வேண்டும்.
மு.நாகூர், ராமநாதபுரம்:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற தன்னை வரவேற்க வந்த, முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாய் காலில் விழுந்து வணங்கி, ஆசி பெற்றுள்ளாரே முதல்வர் விஜய்?
கொள்கை வேறு, மூத்தோர் மதிப்பு வேறு என, ருக்மணி அம்மையார் காலில் முதல்வர் விஜய் விழுந்து ஆசி பெற்றது, அரசியல் நாகரிகத்தின் உன்னத அடையாளமே!
என்.இளங்கோவன், மயிலாடுதுறை:
‘போக்குவரத்து அபராதம் செலுத்தவில்லை என்றால், அந்த தொகையை மின் கட்டணத்துடன் இணைத்து விடலாம்’ என்று உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளதே?
நல்ல யோசனை தான்... ஆனால், ‘ஹெல்மெட்’ அணியவில்லை என, கார் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்துத் துறைக்கும், உச்ச நீதிமன்றம் ஏதாவது கடிவாளம் போட்டால் நல்லது!
எஸ்.பரசுராமன், பெங்களூரு:
தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தனிமனித ஒழுக்கம் குறித்த பாடங்களை, துவக்கப் பள்ளியில் இருந்து கற்பித்தால் என்ன!
நல்ல தொலைநோக்கு பார்வை... பள்ளி பாடத்திட்டத்தில் தமிழக அரசு சேர்க்க வேண்டும்.
