UPDATED : நவ 02, 2026 12:00 AM
ADDED : நவ 01, 2026 09:54 PM
என்.ஆசைத்தம்பி, சென்னை:
‘ஆடம்பரத்திற்கு கடன் வாங்கி செலவு செய்யாதீர்கள்; வருவாயில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்’ என்று, முதல்வர் விஜய், மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளாரே?
முதல்வர் விஜய், சாமானியராக இருந்து தன் உழைப்பால் முன்னேறியவர்; அதனால் இப்படி நல்ல அறிவுரையை வழங்கியுள்ளார். சிறுதுளி பெருவெள்ளம் என்பது, நம் முன்னோர் கூறிய அறிவுரை அல்லவா!
ஆர்.பிரசன்னா, திருச்சி:
அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் கைதாகி, காவலர்களால் அழைத்து செல்லப்படும்போது, ஒன்றுமே நடக்காதது போல் சிரித்துக் கொண்டே செல்கின்றனரே... எப்படி இது அவர்களுக்கு சாத்தியமாகிறது?
ஜீப்பில் செல்லும்போது, அவர்கள் முகம் மட்டுமே நமக்கு தெரிகிறது. ‘பில்டிங் ஸ்ட்ராங்கு; பேஸ்மென்ட் வீக்’ எனும், வடிவேல் காமெடி வகையில் கை, கால்கள் உதறுவது நமக்கு தெரியாதல்லவா... மேலும் சிலருக்கு நெஞ்சு வலி வந்து, காரிலேயே உருளுவதையும் நாம் பார்த்திருக்கிறோமே பிரசன்னா!
கே.மீனாட்சி, புதுடில்லி:
சென்னை கிண்டி அரசு, ஐ.டி.ஐ., விழாவில், சைகை மொழி வாயிலாக வேலை வாய்ப்பு கோரிய மாற்றுத்திறனாளிக்கு, முதல்வர் விஜய் மறுநாளே பணி நியமன ஆணை வழங்கி ஆச்சரியப்படுத்தி உள்ளாரே?
இந்த மாதிரியான மின்னல் வேக செயல்பாடுகள், மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மேலும் வளர்க்கும். விஜயின் இத்தகையை நல்ல செயல்பாடுகள் தொடரட்டும்.
எல்.உமை, சென்னை:
‘அரசு ஊழியர்கள், மத்திய – மாநில அரசின் கொள்கைத் திட்டம், நடவடிக்கைகளை, பொதுவெளியில், ஊடகங்களில், பொதுக்கூட்டங்களில் தவறாக விமர்சிக்கக்கூடாது’ என்ற அரசின் உத்தரவு குறித்து?
உங்கள் வீட்டு விஷயங்களை, கண், காது, மூக்கு வைத்து, நீங்களோ, உங்கள் வீட்டினரோ அக்கம் பக்க வீட்டினருக்குச் சொன்னால், என்ன விளைவு ஏற்படும்... அதுபோலத் தான் இதுவும்!
நிர்வாக பிரச்னைகளை, திட்டங்கள் குறித்த செயல்பாடுகளை, ‘இன்டர்னலாக’ மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினால் போதுஏம... இப்போது, முதல்வரிடம் நேரடியாக மனு கொடுக்கும் வசதியும் உள்ளதே! இப்படிச் செய்தால், அரசு மேற்கொள்ள வேண்டிய நிர்வாகம், சிக்கல் இன்றி நிறைவேறும்!
மு.தெய்வானை, மதுரை:
‘வழக்குகள் எனக்கு புதிதல்ல; என் மீது, 260 வழக்குகள் உள்ளன’ என்கிறாரே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்?
‘நான் எந்த தவறும் செய்யாதவன் என் மீது வழக்குகளே கிடையாது’ என்று ஒரு தலைவர் சொல்வது பெருமையா... இல்லை, ரவுடிகள் போல், ‘என் மேல் 260 வழக்குகள் உள்ளன’ என்பது பெருமையா? சீமான் இப்படி கூறுவது அவர் கட்சியில் உள்ளவர்களையும், தவறான வழிக்கு அழைத்து சென்று விடும்.
ம.ரெங்கராஜன், மதுரை:
‘தினமலர்’ நாளிதழில் அந்துமணி அவர்கள் வாசகர் கேள்விகளுக்கு தினமும் பதில் அளிப்பதால் பொழுதுபோகவில்லை என்று இருந்த எனக்கு, தற்போது பொழுதே போதவில்லை, நானும் தினந்தோறும் கேள்விகள் கேட்பதால்!
நன்றி ரெங்கராஜன்... தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கடிதங்களும், கேள்விகளும் என்னை மேலும் ஆர்வத்துடன் பதில் எழுத உத்வேகப்படுத்துகின்றன.
