UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 10:22 PM

டி.ஜெயசிங், கோவை:
தமிழக முதல்வர் விஜய், அமெரிக்க அதிபர் டிரம்பையே எதிர்த்து போட்டியிடுவார் என்கின்றனரே, த.வெ.க., தொண்டர்கள்?
முதல்வர் விஜய், வாயே திறப்பதில்லை; அப்படியே பேசினாலும், மனதார பேசுகிறார். டிரம்ப் போல் அவர், வாய்க்கு வந்ததை பேச வேண்டும் என, அவரது தொண்டர்கள் எதிர்பார்க்கின்ற னரோ!
என்.ஆல்பா, சென்னை:
மதுரை, நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டம் தனியார் மயமாகிறதாமே?
நல்லது தானே! பிரச்னைகள் எழுந்தால், ‘தனியார் தான் செய்தனர்; நாங்கள் செய்யவில்லை’ என கைகாட்டி விடாமல், தரமாக போடப்படுகிறதா என்பதை அரசு கண்காணிப்பது நலம்!
ஏ.மீனலோசனி, பாண்டி:
‘கூட்டணி கட்சிகளிடம் விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...’ என்று, பா.ஜ.,வைச் சேர்ந்த, எச்.ராஜா கூறியுள்ளாரே?
பலரும் சொல்வதை, எச்.ராஜாவும் சொல்லி இருக்கிறார். இதோடு, நெருக்கமாக பழகும் அரசியல்வாதிகளிடமும், சொந்த கட்சியினரிடமும் விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! அவர்களின் இன்னொரு முகம், விஜய்க்கு தெரியாமலேயே போகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது!
எஸ்.டேனியல் ஜூலியட், கோவை:
‘நமக்கு துரோகம் செய்தவர்களை மறக்கவும் கூடாது; மன்னிக்கவும் கூடாது’ என்று, தி.மு.க.,வின் உதயநிதி ஸ்டாலின் பேசி, அண்ணாதுரையின், ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற கொள்கையை, காற்றில் பறக்க விட்டு விட்டாரே?
இது மட்டுமா... அண்ணாதுரையின் பல கொள்கைகளை மறந்து விட்டதன் காரண மாக, தி.மு.க., இன்று அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.
பி.ராஜ், மதுரை:
‘அ.தி.மு.க., கரைவதற்கு, ஒன்றும் சர்க்கரை அல்ல; இரும்பு’ என்கிறாரே, அதன் பொதுச்செயலர் பழனிசாமி?
அந்த இரும்பு இப்போது துரு பிடித்து உதிரத் துவங்கி விட்டதே, ராஜ்!
ம.ஆதவன், சென்னை:
சுந்தர் பிச்சை ஒரு, ‘மான்ஸ்டர் – அசுரன்’ என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளாரே?
கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, சுந்தர் பிச்சை ஒரு இந்தியர். அவரை ‘அசகாய சூரன், மிகவும் கெட்டிக்காரன்’ என்பதை தான் டிரம்ப் இவ்வாறு ஜாலியாக கூறியுள்ளார். அதற்கு சுந்தர் பிச்சையும், ‘இன்னும் கொஞ்ச நல்ல வார்த்தைகளில் பாராட்டி இருக்கலாம்’ என, கலாய்த்துள்ளார்.
