UPDATED : அக் 12, 2026 12:00 AM
ADDED : அக் 11, 2026 10:04 PM

கே.ராமநாதன், மதுரை:
ரயில் பயணியரின் நலனை மனதில் கொண்டு, ஏராளமான புதுத் தடங்கள், ரயில் பெட்டிகளில் நவீன வசதிகள், பயண நேரக் குறைப்பு என்று, அசுர வேகத்தில் அட்டகாசமாக செயல்படும் ரயில்வே துறை குறித்து?
மத்திய அரசின் ரயில்வே மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. அவர் தான் இப்போது நம் ரயில்வே துறையில் முதுகெலும்பு. பிரதமர் மோடியின், ‘வளர்ந்த பாரதம்’ என்ற இலக்கை நோக்கிச் செல்கிறார் அஸ்வினி வைஷ்ணவ்; அதனால் இந்த, ‘ஜெட்’ வேகம்!
கார்ட்டூன்
ம.ரங்கராஜன், மதுரை:
தி.மு.க., தலைவர் தன்னை, ‘அப்பா’ என்று அழைக்கக் கேட்டுக் கொண்டதை போல், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, தன்னை, ‘சித்தப்பா, பெரியப்பா மாதிரி’ என்றாரே? ஆனால், அப்பாவையும், பெரியப்பாவையும் மக்கள் கண்டுகொள்ளவே இல்லையே?
‘தாய் மாமன்’ இவர்கள் இருவரையும் வீட்டு, ‘சோபா’வில் அமர்ந்து ஓய்வெடுக்கச் சொல்லி விட்டார்!
வி.சுவாமிநாதன், சென்னை:
ரேஷன் கடைகளுக்கு வாங்கப்படும் துவரம் பருப்பு வாயிலாக, கடந்த ஆட்சியை விட, 187 கோடி ரூபாய் சேமிப்பு வந்திருப்பது பற்றி...
இப்படி ஒவ்வொரு துறையையும் கண்கொத்திப் பாம்பாய் கவனிப்பதால், அரசின் கடன் சுமை குறைகிறது; நமக்கும் நல்லது தான்!
எனினும், கடந்த ஆட்சியின், ‘டெண்டர்’களை ரத்து செய்யும்போது, நின்றுபோகும் பல பணிகளை விரைந்து மேற்கொள்ள, விஜய் அரசு, ‘அசுர’ வேகத்தில் செயல்பட வேண்டும்.
கார்ட்டூன்
ஜி.ஹரிணி, உடுமலைப்பேட்டை:
‘ரீல்ஸ் பார்த்தால், மக்களின் வயிறு நிறையுமா?’ என, கேள்வி எழுப்புகிறாரே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின்?
இவரின் இந்தப் பேச்சு, ‘ரீல்ஸ்’ வாயிலாக பலரையும் சென்றடைந்திருக்கிறது. ‘என்னுடைய இந்தப் பேச்சை, ‘ரீல்ஸ்’ போட்டு விடாதீர்கள்’ என்று, ஸ்டாலின் சொல்லவே இல்லையே!
இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் தோற்றுவிட்ட இவரே, ‘ரீல்ஸ்’ அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு, தன் கட்சியினரை முடுக்கி விட்டுள்ளார்; த.வெ.க.,வை ‘ரீல்ஸ் ராஜ்ஜியம் நடத்தாதீர்கள்’ என்கிறார். என்னத்த சொல்ல!தெரியுமா ஹரிணி?
வே.பாண்டித்துரை, கீழக்கரை:
பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப் போவதாக கூறும் கேரளா, கோழிக்கழிவுகளை மட்டும், தமிழகத்தில் கொட்டுவது ஏன்?
கோழிக்கழிவுகளை மட்டுமா... மருத்துவக் கழிவுகளையும் அல்லவா, தமிழகத்தில் கொட்டுகிறது. மாநில எல்லையிலும், வனத்துறையிலும் போலீசார், இன்னும் கண்காணிப்புடன் செயல்பட்டால், இந்த அட்டூழியங்கள் தடுக்கப்படும்.
இ.கஸ்துாரி, துாத்துக்குடி:
தங்க நகைகளில், 14 காரட், சந்தைக்கு வரப் போகிறதாமே?
ஆமாம். 24 காரட் தங்கம், மிகவும் மென்மையானது. சுத்த தங்கமான அதில், நகைகள் செய்ய முடியாது. இப்போது, தங்க இறக்குமதியை மத்திய அரசு குறைத்துள்ளதால், தங்க நகை வாங்குவோருக்கு சாதகமாக, 14 காரட் தங்க நகைகள் சந்தைக்கு வந்துள்ளன.
இந்த வகை நகையில், 58.3 சதவீதம் தங்கமும்; செப்பு, வெள்ளி, நிக்கல், துத்தநாகம் ஆகிய உலோகங்களும் கலந்து இருக்கும்.
