UPDATED : மார் 21, 2024 03:52 AM
ADDED : மார் 21, 2024 12:30 AM

சென்னை:சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வீடுகளின் விலைப்புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக, தேசிய வீட்டுவசதி வங்கியின் ரியல் எஸ்டேட் புள்ளி விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில், தேசிய வீட்டுவசதி வங்கி செயல்படுகிறது. வீட்டுவசதி நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பாக இது செயல்படுகிறது.
அறிக்கை
நாடு முழுதும், 50 நகரங்களில் வீடுகளின் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான விலை புள்ளி விபரங்களை, தேசிய வீட்டு வசதி வங்கி வெளியிட்டு வருகிறது.
இதில் காலாண்டுக்கு காலாண்டு என்ற அடிப்படையிலும், ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையிலும் வீடுகளின் விற்பனை விலைகள் ஒப்பிடப்பட்டு புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன.
இந்த வகையில் ஒட்டுமொத்த சராசரி அடிப்படையில், 2022 டிச., நிலவரத்தைவிட, 2023 டிசம்பரில் விலை புள்ளிகள், 4.7 சதவீதம் வரை உயர்ந்து உள்ளன.
தமிழகத்தில் ஆண்டு மாற்றம் அடிப்படையில் கணக்கிடும் போது, சென்னையில் வீடுகளின் விலை புள்ளிகள், 3.8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதே அடிப்படையில், கோவையில், ஆண்டு மாற்றம் அடிப்படையில் வீடுகளின் விலை புள்ளிகள், 5.1 சதவீதம் வரை சரிந்துள்ளதாக, தேசிய வீட்டுவசதி வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், காலாண்டு மாற்றம் அடிப்படையில் பார்க்கும் போது, சென்னையில், 2022 டிசம்பரில், 118 ஆக இருந்த வீடுகளின் விலை புள்ளிகள், 2023 டிசம்பரில், 123 ஆக உயர்ந்துள்ளன.
கோவையில், 2022 டிச., நிலவரப்படி, 135 ஆக இருந்த வீடுகளின் விலை புள்ளிகள், 2023 டிசம்பரில், 128 ஆக உள்ளது.
குறிப்பாக, காலாண்டு ஒப்பீடு அடிப்படையில், 2023 செப்., 127 ஆக இருந்த விலை புள்ளிகள் டிசம்பரில், 128 ஆக உயர்ந்துள்ளது.
விலையில் மாற்றம் என்ன?
சென்னையில் கட்டுமான நிலையில் உள்ள வீடுகளின் சராசரி விலை, 2022 டிச., நிலவரப்படி, சதுர அடி, 11,301 ரூபாயாக இருந்தது.
இது, 2023 டிச., இறுதியில், 11,650 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கோவையில், 2022 டிச., நிலவரப்படி, சதுர அடி, 7,262 ரூபாயாக இருந்த விலை 2023 டிச., இறுதியில், சதுர அடி, 8,343 ரூபாயாக உயர்ந்துள்ளதாக தேசிய வீட்டுவசதி வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

