20 மாவட்டங்களில் 1,208 ஏக்கர் வீட்டுவசதி வாரியம் விடுவிப்பு
20 மாவட்டங்களில் 1,208 ஏக்கர் வீட்டுவசதி வாரியம் விடுவிப்பு
ADDED : மே 02, 2025 11:07 PM
சென்னை:தமிழகத்தில், 20 மாவட்டங்களில், கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட, 1,208 ஏக்கர் நிலத்தை விடுவிக்க, வீட்டுவசதி வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குடியிருப்பு திட்டங்களுக்காக, தனியாரிடம் இருந்து வாரியம் நிலம் கையகப்படுத்துகிறது. பெரும்பாலான இடங்களில், எதிர்கால திட்டங்களை கருத்தில் வைத்து, நிலம் கையகப்படுத்துவதற்கான, 'நோட்டீஸ்' மட்டும் அளிக்கப்பட்டு இருக்கும். அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் விடுபட்டு இருக்கும்.
அந்த நிலம், அதன் உரிமையாளர்களால் வேறு நபர்களுக்கு விற்கப்பட்டு, வாங்கியவர்கள் வீடு கட்டி குடியிருந்து வருவர். இத்தகைய சூழலில் உள்ள நிலத்தை விடுவிக்க, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது.
இந்த வகையில், முதற்கட்ட நோட்டீஸ்கள் அளிக்கப்பட்ட, 5,910 ஏக்கரில், 3,710 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, 1,208 ஏக்கர் நிலத்தை விடுவிப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
சென்னை, சேலம், கோவை, மதுரை கோட்டங்களில், 20 மாவட்டங்களைச் சேர்ந்த, 53 கிராமங்களில் உள்ள, 1,208 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டு உள்ளது.
அதன் உரிமையாளர்களுக்கு இதற்கான கடிதங்கள் அனுப்பப்படும். இதனால், நில விற்பனை, கட்டுமானம், வங்கிக்கடன் போன்ற தேவைகளுக்கு, வீட்டுவசதி வாரியத்திடம் தடையின்மை சான்று கேட்டுவர வேண்டியதில்லை.
சர்வே எண் வாரியாக விடுவிக்கப்பட்ட நில விபரங்கள் அடங்கிய அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.