1,570 வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்யாத வீட்டு வசதித்துறை
1,570 வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்யாத வீட்டு வசதித்துறை
ADDED : பிப் 04, 2025 06:23 AM

சென்னை: வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும், பல்வேறு துறை அதிகாரிகள், 1,570 வழக்குகளில், பதில் மனு தாக்கல் செய்யாமல் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவற்றுக்கு விரைவாக பதில் மனு தாக்கல் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., மற்றும் நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கூட்டுறவு வீட்டு வசதித்துறை போன்றவை செயல்படுகின்றன.
இத்துறைகளின் வழக்கமான பணியில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக, நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
குறிப்பாக, கட்டுமான திட்ட அனுமதி, கட்டட விதிமீறல், வீடு ஒப்படைப்பு, பணியாளர்கள் பிரச்னை போன்றவை தொடர்பாக வழக்குகள் வருகின்றன.
இந்த வழக்குகளை கவனித்து, உரிய பதில் மனுக்கள் தாக்கல் செய்ய, வழக்கறிஞர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேவை அடிப்படையில், கூடுதலாக வெளியில் இருந்தும் வழக்கறிஞர்கள் வரவழைக்கப்படுகின்றனர்.
இருந்தும், பெரும்பாலான வழக்குகளில், குறிப்பிட்ட காலத்தில் சம்பந்தப்பட்ட துறை சார்பில், பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
அதனால், துறையின் உயர் அதிகாரிகள், நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு தகவல் தொகுப்பு குறித்து, உயர் அதிகாரிகள் ஆய்வு கூட்டம், தலைமை செயலகத்தில் சமீபத்தில் நடந்தது.
அதில், துறைவாரியாக நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை, அதன் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. வீட்டுவசதி துறையின் கீழ் செயல்படும், பிற துறைகள் தொடர்பாக, 1,499 ரிட் மனு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், ஒன்றுக்கு கூட அதிகாரிகள், பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
அத்துடன், ரிட் மனு மேல்முறையீடு தொடர்பான, 71 வழக்குகளிலும் அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யாமல் உள்ளனர். மொத்தம், 1,570 வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டி இருப்பது தெரியவந்தது.
இது தவிர, ஆறு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில், விரைவாக பதில் மனு தாக்கல் செய்ய, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.