தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பட்ஜெட் தயாரிக்கப்படுவது எப்படி?

பட்ஜெட் தயாரிக்கப்படுவது எப்படி?

பட்ஜெட் தயாரிக்கப்படுவது எப்படி?


ADDED : ஜூன் 13, 2011 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2011 11:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏற்கனவே, வரும் செப்டம்பர் வரையிலான செலவுகளுக்கு, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மீதமுள்ள மாதங்களுக்கென வரும் ஜூலை மாதம் புது அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது.



பட்ஜெட் தயாரிப்பை பொறுத்தவரை, ஒவ்வொரு துறைக்கான மானியத்துக்கு என, நிதித் துறையில் தனித்தனி பிரிவுகள் உள்ளன.

மொத்தம் 51 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும், ஒரு பிரிவு அலுவலர், இரண்டு உதவி பிரிவு அலுவலர்கள் இருப்பர்.முன்பெல்லாம், பட்ஜெட்டுக்கென நியமிக்கப்பட்டிருக்கும் சார்பு செயலர் தான், இவற்றை ஒருங்கிணைப்பார். ஆனால், தற்போது, அனைத்து சார்பு செயலர்கள், துணைச் செயலர்கள் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் ஒவ்வொரு துறையினரையும் அழைத்து, பட்ஜெட் கூட்டங்கள் நடத்துவர்.



இக்கூட்டம், பட்ஜெட் தயாரிப்புக்கு ஆறு மாதத்துக்கு முன்பே நடத்தப்படும்.இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், இதுபோன்ற கூட்டம் நடத்தப்படாது. எனினும், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்காக வரும் செப்டம்பரில் இக்கூட்டங்கள் நடத்தப்படும்.இதுதவிர, மாநில திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையும் தனியாக கூட்டம் நடத்தும். அரசின் புதிய திட்டங்கள் குறித்து இதில் ஆய்வு செய்யப்படும். 10 முதல் 15 நாட்கள் இக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். அதனடிப்படையில், எந்தெந்த திட்டங்களை சேர்க்கலாம், அதற்கான நிதி ஆதாரம் ஆகியவை குறித்து நிதித்துறை முடிவு செய்யும்.



பட்ஜெட் தயாரிப்புப் பணியின் போது, அதில் ஈடுபடும் நிதித் துறை அலுவலர்கள், மாலை 5.45 மணிக்கு அலுவலக நேரம் முடிந்த பின், இரவு 8.45 மணி வரை கூடுதலாக பணியாற்றுவர். பட்ஜெட் தயாரிப்பு பணியில், இந்த நேரத்தில் இவர்கள் ஈடுபடுவதால், இதற்கென உதவி பிரிவு அலுவலர், பிரிவு அலுவலர் ஆகியோருக்கு 75 ரூபாயும், துணைச் செயலருக்கு 100 ரூபாயும், இணைச் செயலருக்கு 125 ரூபாயும் தினமும் படியாக வழங்கப்படுகிறது. இதற்கென தனி வருகை பதிவேடும் பின்பற்றப்படுகிறது.



இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் (இடைக்கால பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், அதனடிப்படையில் தான் மீதமுள்ள காலத்துக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். எனினும், புதிய அரசு கொண்டு வரும் புதிய திட்டங்களுக்கு, இதில் நிதி ஒதுக்கப்படும். ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில், எது தேவையில்லையோ அந்த நிதி புதிய திட்டங்களுக்காக மாற்றப்படும்.இதுதவிர, டில்லி சென்றுள்ள முதல்வர், அங்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகைகளை வலியுறுத்துவார். எனவே, மத்திய அரசு அளிக்கும் நிதியுதவியை பொறுத்து, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுகளில் மாற்றம் இருக்கும்.



பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவற்றை தயாரிக்கும் பணி வேகமாக நடக்கும். இதன்பின், நிதியமைச்சரின் பட்ஜெட் உரை தயாரிக்கப்படும். துணைச் செயலர் (பட்ஜெட்), நிதித் துறைச் செயலர், நிதியமைச்சர், முதல்வர் ஆகியோருடன் கலந்து பேசி, இந்த உரை இறுதி செய்யப்படும்.பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு என தனி அடையாள அட்டை வழங்கப்படும். அவர்களுக்கென தனியாக போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்படும்.இதன்பின், பட்ஜெட் தாக்கலுக்கு முதல் நாளன்று தான் அதை அச்சிடுவதற்கு அனுப்புவர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று காலை 6 மணிக்கு தான், அதன் பிரதிகளை, அச்சகத்தில் இருந்து தருவர். நிதியமைச்சருக்கும், முதல்வருக்கும் இதன் பிரதி வழங்கப்படும். மற்ற பிரதிகள் ரகசிய ஆவணமாக, சட்டசபை செயலகத்திடம் ஒப்படைக்கப்படும். அவ்வாறு ஒப்படைத்த பின், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை, அதை வெளியிடாமல் காப்பது, சட்டசபை செயலகத்தின் பொறுப்பு.



நடுத்தர கால நிதித் திட்டம் அவசியம் : அரசின் நிதிநிலை உறுதி, நீடித்த தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, மாநில சட்டசபை, சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. வருவாய் உபரியை எய்துதல், நிதிப் பற்றாக்குறையை குறைத்தல், கடன் வாங்குதல் போன்றவற்றை இச்சட்டம் வகை செய்கிறது. இச்சட்டத்தின் 3(1)ஆம் பிரிவின் படி, வரவு - செலவு திட்ட அறிக்கையுடன் நடுத்தர கால நிதித் திட்டம் ஒன்றை சட்டசபையில் சமர்ப்பிக்க வேண்டும். நிதியமைச்சர், வரவு - செலவு திட்டத்தில், உள்ள இலக்குகளை அடைவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரையாண்டிற்கு ஒரு முறை ஆய்வு செய்து, அவ்வறிக்கையை சட்டசபையில் சமர்ப்பிக்க வேண்டும். செயல்படுத்த வேண்டிய குறிப்புகள் சம்பந்தப்பட்ட துறையால் தயாரிக்கப்பட்டு, மாநிலத் திட்டக்குழுவுக்கு அனுப்பப்படும். திட்டக்குழுவில், எடுக்கப்படும் முக்கியத் திட்டங்கள் அனைத்தும் நிதி நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் பிறகு ஒப்புதல் பெறப்படும். முதல்வர் தலைமையில் உள்ள அமைச்சரவை குழுவில், இந்த நிதி நிலைக்குழுவும் அடங்கும்.வரவு -செலவுத் திட்டத்திற்கு, சட்டசபை அனுமதியளித்து நிதியொதுக்க சட்ட மசோதாவை சட்டமாக இயற்றுவதற்கு, கவர்னர் அனுமதி அளிக்க வேண்டும். பிறகு, அதில் உள்ள செலவுகளை செய்ய அரசு அனுமதி வழங்கும்.



'பட்ஜெட்' பெயர் வந்தது எப்படி?மத்திய, மாநில அரசின் சார்பில் ஆண்டுதோறும் அரசின் வரவு - செலவு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதை, பட்ஜெட் என்று தான் அனைவரும் அழைப்பர். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், 'பட்ஜெட்' என்னும் சொல் எங்கும் இல்லை.பல ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தின் நிதியமைச்சர், ஆண்டு நிதி தொடர்பான குறிப்புகளை ஒரு தோல் பையில் எடுத்துச் சென்றார். அந்த பைக்கு, 'பட்ஜெட்' என்று பெயர். அப்பையின் பெயரே நாளடைவில், பைக்குள் இருந்த ஆவணங்களின் பெயராக, அதாவது, 'பட்ஜெட்' என மாறியது.



- நமது சிறப்பு நிருபர் -



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us