வழக்கை போட்டுவிட்டு இப்படியா செய்வது? செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் கண்டிப்பு!
வழக்கை போட்டுவிட்டு இப்படியா செய்வது? செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் கண்டிப்பு!
UPDATED : ஜூலை 17, 2025 01:19 PM
ADDED : ஜூலை 17, 2025 02:58 AM

'உங்கள் வழக்கை இரவு முழுதும் படித்து விட்டு வந்தால் விசாரணையை ஒத்தி வைக்கும்படி கேட்கிறீர்களா?' என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி பணத்தை திருப்பி தருவதாக கூறியதால், வழக்கை வாபஸ் பெற விரும்புவதாக பாதிக்கப்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
இதை எதிர்த்து, ஒய்.பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'புகார் கொடுத்தோர், முன் வந்தனர் என்பதற்காக, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது சரியானது அல்ல' என சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை 2022ல் ரத்து செய்தது.
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை, விசாரணை நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
'உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பில், சில வரிகள் தனக்கு எதிராகவும், விசாரணை நீதிமன்றத்தின் போக்கையே மாற்றும் வகையிலும் இருப்பதால், அந்த வரிகளை நீக்க வேண்டும்' எனக்கோரி, செந்தில் பாலாஜி தரப்பு சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை வேறொரு தினத்துக்கு ஒத்திவைக்குமாறு கோரினார்.
இதனால், அதிருப்தியடைந்த நீதிபதிகள், 'நிவாரணம் கேட்டு வந்தது நீங்கள். இரவு முழுதும் உங்கள் வழக்கை படித்துவிட்டு விசாரிக்க வந்தால், சர்வ சாதாரணமாக வழக்கை ஒத்தி வைக்க கேட்கிறீர்களே, இது என்ன நடைமுறை?' என, கடிந்து கொண்டு வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -