ADDED : செப் 30, 2024 05:39 AM

கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், திருப்பூரில் கஞ்சா, குட்கா புழக்கம் நீடிக்கிறது.
பஸ்களில்...
பத்து கிலோவுக்கு மேல் பார்சல் ஏற்றினால் அல்லது மூட்டை, பை பெரிதாக இருந்தால் என்னவென்று பஸ்களில் நடத்துனர்கள் விசாரிக்கின்றனர். சந்தேகம் இருந்தால், பையை திறந்து காட்டும் படி கூறுவர். உள்ளூருக்குள் இயங்கும் பஸ்களில், பயணிக்கும் பயணிகளுடன் குட்கா 'பயணிப்பதில்லை'. மாறாக, வெளிமாநிலங்களில் இருந்து அல்லது மாநில எல்லை வரை சென்று வரும் பஸ்களில் பண்டல் அனுப்பி வைக்கும் போது, பத்தோடு பதினொன்றாக 'குட்கா'வும் கலந்து வருகிறது.
ரயில்களில்...
ரயில்கள் மூலம் திருப்பூருக்கு குட்கா அதிகளவில் வருகிறது. திருப்பூரை கடந்து கோவை மற்றும் ஈரோட்டுக்கு நாள் ஒன்றுக்கு, 31 ரயில்கள் செல்கிறது. இதில், 23 ரயில்கள், வடமாநிலங்களில் இருந்து வருபவை. ஒரு ரயிலில், 200 பேர் என்றாலும், சர்வசாதாரணமாக, 2,000 முதல், 4,000 வடமாநிலத்தினர் திருப்பூர் வந்திறங்குகின்றனர். இவர்கள் அனைவரையும், அவர்கள் கொண்டு வரும் உடைமைகளை பரிசோதித்து விட்டு தான் திருப்பூருக்கு அனுமதிக்க முடியும் என்பது சாத்தியமற்றது.
அதே நேரம், சந்தேகத்துக்கு இடமான, பெரிய லக்கேஜ் கொண்டு வருவோரை பரிசோதிக்கலாம். இவர்களில் சிலர், குட்காவை அதிகளவில் கடத்திக்கொண்டு வருகின்றனர். ஆனால், பிடிபடுவது சொற்பமே.
ரோந்து தீவிரம்
முன்பு இருந்ததை விட தற்போதைக்கு போலீசார் டூவீலர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்; வரவேற்கத்தக்கது. அதே நேரம், டூவீலர், கார்கள் மூலம் மாநகருக்குள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சப்ளையாகும் குட்கா, பான்மசாலா பண்டல்களை கண்டறிந்து, பிடிக்க வேண்டும்
கருப்பு ஆடுகள்
குட்கா விற்பனை குறித்து புகார் தெரிவிக்க, போலீசார், உணவு பாதுகாப்பு துறையினர் அலைபேசி எண் வழங்கியுள்ளனர். ஆனால், விற்பனையாவது குறித்து சொற்ப அளவிலான புகார்களே வருகிறது. குட்கா, பான்மசாலா இல்லாத திருப்பூர் உருவாக வேண்டுமெனில், நம்மில் பலரும் புகார் செய்ய முன்வர வேண்டும். புகாரை பெறும் அதிகாரிகள் விற்பனையாளர்களுக்கு சாதகமாக முன்கூட்டியே தகவலை தெரிவிக்கும் 'கருப்பு ஆடு'களாக செயல்படாமல், நேர்மையுடன் ஒவ்வொருவரும் பணியாற்றினால், நிச்சயம் குட்கா விற்பனையை தடுக்க முடியும்.

