நிலவரம் எப்படி இருக்கு; அமைச்சரிடம் கேட்டறிந்த முதல்வர்
நிலவரம் எப்படி இருக்கு; அமைச்சரிடம் கேட்டறிந்த முதல்வர்
ADDED : டிச 02, 2024 10:33 AM

சென்னை: கடலூரில் வெள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து வருகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன.
கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அதேபோல, திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால், 7 பேர் மண்ணுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நடக்கும் மீட்பு பணிகளை அமைச்சர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், கடலூரில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் முதல்வர் ஸ்டாலின் வீடியோ அழைப்பில் கேட்டறிந்தார்.
நேற்று விழுப்புரம் மரக்காணத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர் பொன்முடியிடம் வீடியோ அழைப்பில் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.