தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க எவ்வளவு நேரம் அனுமதி; கட்டுப்பாடுகள் என்னென்ன?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க எவ்வளவு நேரம் அனுமதி; கட்டுப்பாடுகள் என்னென்ன?
ADDED : அக் 20, 2024 02:17 PM

சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் இரவில் இருந்தே மக்கள் பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கட்டுப்பாடுகள்
* பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
* மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் ஏற்பாடு செய்யலாம்.
தவிர்க்க வேண்டியவை!
* அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
* மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
* குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.