ADDED : ஜன 07, 2024 06:59 AM

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலின் போது, அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணமோ, பரிசோ கொடுத்தால், மொபைல் போனில் படம் பிடித்து, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பும் வகையில், ஒரு 'ஆப்'பை வைத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
திருமங்கலம் பார்முலா முதல் திணறடிக்கும் பார்முலா வரை எத்தனை எத்தனை வகை கண்டோம்... ஏதாவது ஒன்றையாவது தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடிந்ததா? இல்லையே!
இப்போது இந்த, 'ஆப்' எதற்கு? ஓட்டுக்கு துட்டு வாங்குபவர்கள், புகார் அளிக்கவா போகின்றனர்? சிலரோ, 'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே...' ரகம்.
பெரிய நகரங்களில், மெத்தப் படித்தவர்கள், படிதாண்டா உத்தமர்கள்; வாக்குச்சாவடி பக்கமே தலைவைத்து படுக்க மாட்டார்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக, ஆணையமும் ஒன்றும், சீசரின் மனைவி மாதிரி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது அல்ல!
திராவிடக் கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக மக்களிடம் சுரண்டியதை, நாங்கள் ஓட்டுக்கு துட்டு வாயிலாக திரும்பக் கேட்கின்றனர் என சிலர் கூறுவதை, என்னென்று சொல்வது!ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு... 'சலுகையாய் தந்ததை உரிமையாய் அனுபவித்தல்' என்று... அதுபோல, ஆரம்பத்தில் இலவசங்களையும், பணத்தையும் அரசு தரும் சலுகையாய் நினைத்த குடிமக்கள், இன்று அதை உரிமையாய் பார்க்கத் துவங்கி விட்டனர். இனி எந்த கொம்பன் வந்தாலும், காசில்லை என்றால் ஓட்டு இல்லை!
கடந்த தேர்தலில், ஒரு கிராமமே ஓட்டு போடாமல் இருந்தது; காரணம் கேட்டதற்கு, 'எப்படி போடுவோம்... இன்னும் பணம் வரவில்லையே...' என்றனர். ஆக சட்டபூர்வமாக்கப்பட்ட இந்த லஞ்சம், இன்று தேசிய மயமாக்கப்பட்டு விட்டது என்பது தான் கசப்பான உண்மை!
இனி, எத்தனை, 'ஆப்'புகள் வந்தாலும், அத்தனைக்கும், 'ஆப்பு' தான் கிடைக்கும் இங்கே!