ADDED : ஜூலை 26, 2011 07:32 PM
தேவாரம்:தேவாரத்தில் இரண்டு பேர் உடல் சிதறி பலியான விபத்தில் வெடித்தது, ராணுவத்தில் பயிற்சிக்கு பயன்படுத்தும் ராக்கெட் லாஞ்சர் என்று தெரிய வந்துள்ளது.தேனி மாவட்டம், தேவாரத்தைச் சேர்ந்த குணசேகரன், 45; இரும்பு வியாபாரி.
இவர், நேற்று முன்தினம் இரண்டடி உயர உருளை போன்ற பொருளிலிருந்து, பித்தளையைப் பிரித்தெடுக்க சுத்தியலால் உடைத்தார். அப்பொருள் வெடித்ததில், உடல் சிதறி அவரும், அந்த வழியாகச் சென்ற பவுன்தாயும் இறந்தனர்.லாஞ்சர்: ராணுவப் பயிற்சி முகாம்களில் பயன்படுத்தும் 51 எம்.எம்., ராக்கெட் லாஞ்சர் தான் வெடித்தது என, போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதே சமயம் லாஞ்சர், குணசேகரனுக்கு எப்படி கிடைத்தது என்பது தான் இப்போதைய கேள்வி.தனிப்படை: சம்பவ இடத்தை எஸ்.பி., பிரவீன்குமார் பார்வையிட்டார். இரண்டு தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். வெடித்த குண்டின் பாகங்கள் சேகரிக்கப்பட்டு, சென்னை தடய அறிவியல் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதிகாரி பேட்டி: டி.எஸ்.பி., கலிபுல்லா கூறுகையில், 'ராணுவப் பயிற்சியின் போது, வெடிக்காத லாஞ்சரை, அப்படைப் பிரிவில் இருப்பவர்கள் வீட்டிற்கு எடுத்து வருவர். அலங்காரப் பொருளாக பயன்படுத்துவர். அவ்வாறு இப்பகுதியில் உள்ள ராணுவ வீரரின் வீட்டில் இருந்த லாஞ்சரை, அவரது வீட்டில் இருந்தவர்கள் குணசேகரனிடம் விற்றிருக்கலாம்; அதை உடைக்கும்போது வெடித்திருக்க வாய்ப்புள்ளது' என்றார்.பட்டியல்: தேவாரம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் உள்ளனர். இவர்களின் பட்டியல் தயாராகிறது. இவர்களில் யாரிடம் லாஞ்சர் இருந்தது என, போலீசார் விசாரிக்க உள்ளனர்.