பாஷா இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தது எப்படி: அண்ணாமலை கேள்வி
பாஷா இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தது எப்படி: அண்ணாமலை கேள்வி
ADDED : டிச 17, 2024 06:50 PM

சென்னை: '' பா.ஜ.,வினர் 10 பேர் சேருவதற்கு அனுமதி கொடுக்காத போலீசார், அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா இறுதி ஊர்வலத்தில் இத்தனை பேர் சேருவதற்கு எப்படி அனுமதி கொடுக்கிறார்கள்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம், கோவையில் மரணமடைந்த அல் உம்மா இயக்கத்தலைவர் பாஷா உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அண்ணாமலை அளித்த பதில்: இது கண்டிக்கத்தக்கது. வேதனை அளிக்கிறது. பா.ஜ.,வின் நிலைப்பாட்டை துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். பாஷா பரோலில் வெளியில் வந்துள்ளார். இந்த வழக்கில், கோவையில் எத்தனை உயிர்கள் பறிபோனது என்பது அனைவருக்கும் தெரியும். அது ஆறாத ரணமாக உள்ளது. இன்று கட்சித் தலைவர்கள் இது குறித்து டுவீட் போட்டு, தியாகி போல் மாற்றி உள்ளனர்.
பா.ஜ.,வினர் 10 பேர் சேருவதற்கு அனுமதி கொடுக்காத போலீசார், எப்படி இத்தனை பேர் சேருவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். தி.மு.க., அரசு திருப்திபடுத்துதல் அரசியலின் உச்சத்தில் இருக்கிறது. கோவையில் பாஷா உடலை ஊர்வலமாக கொண்டு செல்ல எப்படி அனுமதி கொடுத்தனர்? இது தேவையில்லாமல் வகுப்புவாத ரீதியில் பிரச்னை உருவாக்கும்.
கோவையில் ஒரு விஷயம் நடந்து அதில் என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அமைதி திரும்பிக் கொண்டு உள்ளது. ஆட்சியில் இருக்கும் தி.மு.க.,வும் கவனத்துடன் இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை வேரோடு அறுக்க வேண்டும். ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை, தானாக சேர்ந்துவிட்டார்கள், நாங்கள் என்ன செய்வது என்கின்றனர்.
மாவட்ட பா.ஜ.,வினர் வெள்ளிக்கிழமையை கருப்பு நாளாக அறிவித்து நாங்களும் ஊர்வலம் எடுப்போம் என்கின்றனர். தலைவர்களாக நாங்கள் அனைவருடன் பேசி வருகிறோம். எங்களுக்கும் பொறுப்பு உள்ளது. இந்த விவகாரத்தை உருவாக்கியது ஆளுங்கட்சி. இதை கையாண்ட விதம் சரியில்லை.
காலையில் இல்லை என்றவர்கள், மதியம் உள்ளது என்றனர். மருத்துவமனையில் இருந்து இல்லை, வீட்டில் இருந்து உள்ளது என்கின்றனர். தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு உள்ளனர். செயற்கையாக அனைவரையும் தியாகிகள் என்கின்றனர். இறந்த மனிதர்களுக்கு அனைவருக்கும் மரியாதை கொடுப்பதுதான். அவரை யாரும் மரியாதைக் குறைவாக பேசவில்லை. அவர் செய்தது அனைவருக்கும் தெரியும். இதை ஊர்வலமாக கவுரவப்படுத்த வேண்டுமா? என்பது தான் பா.ஜ.,வின் கேள்வி. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.