கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது குற்றமாகாது: உயர் நீதிமன்றம் கருத்து
கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது குற்றமாகாது: உயர் நீதிமன்றம் கருத்து
ADDED : நவ 16, 2024 01:36 AM

மதுரை: 'பருவ வயதில் காதல் வசப்பட்ட இருவர், ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது இயல்பானது. அது குற்றமாகாது' என, உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்தார்.
துாத்துக்குடியைச் சேர்ந்த 23 வயது இளைஞர், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன் மீது, துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீசார் 2022ல் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வழக்கறிஞர் வாதாடியதாவது:
மனுதாரரும், 19 வயது இளம் பெண்ணும் காதலித்து உள்ளனர். ஒரு நாள் இரவில் தனியாக சந்தித்தபோது மனுதாரர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதுகுறித்து தன் பெற்றோரிடம் அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.
பின், மனுதாரரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார். அதற்கு மனுதாரர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான புகாரில் இந்திய தண்டனை சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
உடல் ரீதியான உறவை ஏற்படுத்தும் நோக்கத்தில் விரும்பத்தகாத பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுபவர் மீதுதான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பருவ வயதில் காதல் வசப்பட்ட இருவர், ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது இயல்பானது.
இது எப்படி, மேற்கண்ட சட்டப்பிரிவின்கீழ் குற்றமாகும்?
அவ்வகையில் மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்தபோதும், அவர் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை.
அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் அது, சட்டத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக அமையும்.
இவ்வழக்கின் இறுதி அறிக்கையை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என, உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.
ஆனாலும் போலீசார், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துஉள்ளனர்.
இதையும், மனுதாரர் மீதான வழக்கையும் இந்த நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்கிறது.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.