தமிழகத்தில் பதுங்கியுள்ள ஆந்திர பெண் தாதாவின் கூட்டாளிகளை பிடிக்க வேட்டை
தமிழகத்தில் பதுங்கியுள்ள ஆந்திர பெண் தாதாவின் கூட்டாளிகளை பிடிக்க வேட்டை
ADDED : டிச 30, 2025 06:18 AM

சென்னை: தமிழகத்தில் பதுங்கியுள்ள ஆந்திர மாநில கஞ்சா கடத்தல் பெண் தாதாவின் கூட்டாளிகளை, என்.சி.பி., எனும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் மென்பொருள் நிறுவன ஊழியராக சில காலம் பணிபுரிந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சா கடத்தல் தாதா காடே ரேணுகா மற்றும் அவரது கூட்டாளிகள் எட்டு பேர், ஆந்திர மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள், ஒடிஷா மாநில எல்லையில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தமிழகம் முழுதும் வினியோகம் செய்துள்ளனர்; இலங்கைக்கும் கடத்த முயன்றுள்ளனர். இக்கும்பல் குறித்து, என்.சி.பி., எனும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
கஞ்சா கடத்தலுக்கு காடே ரேணுகாவின் வலது கரமாக சூர்யா காளிதாஸ் என்பவர் இருந்துள்ளார். இடைத்தரகராக செயல்பட்ட அத்துரி பிரசாத் என்பவர் தான், ஒடிஷாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களிடம், 1 கிலோ கஞ்சாவை 5,000 ரூபாய் என்ற விலைக்கு வாங்கி வந்து, காடே ரேணுகா மற்றும் சூர்யா காளிதாஸ் ஆகியோரிடம் சேர்த்துள்ளார்.
கஞ்சா கடத்தல் வாகன ஓட்டுநர்களாக மதன் குமார், நாகமுத்து ஆகியோர் செயல்பட்டு உள்ளனர். இவர்களிடம், இலங்கைக்கு கஞ்சா கடத்தும் பொறுப்பை காடே ரேணுகா ஒப்படைத்துள்ளார். காடே ரேணுகா, பெங்களூரில் மென்பொருள் நிறுவன ஊழியர் போல மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருள் வினியோகத்திலும் ஈடுபட்டுள்ளார்.
அவர், ஆந்திரா, பெங்களூரு மற்றும் தமிழகத்தில் பல இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து கூட்டாளிகளை தங்க வைத்துள்ளார். அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். கோவையில் அவரது கூட்டாளிகள் தங்கி இருந்த வீட்டில் விசாரணை நடத்தி முடித்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

