கிரைம்: கர்ப்பிணியை ஓடும் பஸ்சிலிருந்து மிதித்து கொன்ற கணவன் கைது
கிரைம்: கர்ப்பிணியை ஓடும் பஸ்சிலிருந்து மிதித்து கொன்ற கணவன் கைது
ADDED : ஜன 29, 2024 04:06 AM

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேம்பார்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டி 24. இவருக்கும் நத்தம் கல்வேலிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் மகள் வளர்மதிக்கும் 17, பழக்கம் ஏற்பட்டது. 8 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் வளர்மதி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். பாண்டிக்கு மது பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு நத்தம் அருகே உள்ள வளர்மதியின் தந்தை வீட்டிற்கு வேம்பார்பட்டியிலிருந்து பாண்டி, வளர்மதி இருவரும் அரசு பஸ்சில் சென்றனர். அப்போது பாண்டி போதையில் இருந்ததால் மனைவியுடன் தகராறு செய்தார். பஸ் எஸ்.கொடை பகுதியில் சென்ற போது பாண்டி மனைவியை ஓடும் பஸ்சிலிருந்து கீழே தள்ளிவிட்டார். அக்கம்பக்கத்தினர் வளர்மதியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்தார். இன்ஸ்பெக்டர் முனியசாமி, எஸ்.ஐ., சிவராஜா மற்றும் போலீசார் விசாரித்து பாண்டியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் போதையில் இருந்த பாண்டி எட்டி உதைத்ததில் வளர்மதி இறந்தது தெரிந்தது.
தி.மு.க., வட்ட செயலர் மதுரையில் வெட்டி கொலை
மதுரை, ஜெய்ஹிந்த்புரம், எம்.கே.புரத்தை சேர்ந்தவர் திருமுருகன், 43; மதுரை மாநகராட்சி 7வது வட்ட தி.மு.க., செயலர். நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னையே கொலைக்கு காரணம் என, தெரிந்தது. அவரது மருமகன் ராஜா, அவரது மனைவி நந்தினி உள்ளிட்டோரிடம் ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் விசாரிக்கிறார்.
ஓட்டலில் பரோட்டா கொடுக்காததால் பெட்ரோல் குண்டுவீச்சு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பஸ் ஸ்டாண்ட் அருகே அல்புஹாரி ஓட்டல் உள்ளது. இங்கு ஜன., 18 இரவு முத்துக்குமார் பரோட்டா சாப்பிட வந்துள்ளார். ஓட்டல் உரிமையாளர் ஷேக் அப்துல்லா சாப்பிட எதுவுமில்லை எனக்கூறினார். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் புரோட்டா கொடுக்கவில்லை என்றால் கடையை எரித்து விடுவேன் என மிரட்டினார். போலீசில் ஷேக் அப்துல்லா புகார் அளித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துக்குமார் பிளாஸ்டிக் பையில் பெட்ரோல் வாங்கி அதில் தீ வைத்து ஓட்டலில் வீசினார். தீ விபத்தில் மாஸ்டர் வேலு 45, முகத்தில் காயமடைந்து கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
தன் வீட்டு பெண்கள் படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ், 26. இவர் தன் குடும்பப் பெண்களின் படங்களை செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார்.
இதையறிந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷிடம் புகார் செய்தனர். 'சைபர் கிரைம்' போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், விக்னேஷ் தன் சமூக வலைதள கணக்கில் இருந்து படங்களை, 'அப்டேட்' செய்தது உறுதியானது. அவரை போலீசார் கைது செய்தனர்.
ஓய்வுபெற்ற ஊழியரிடம் ரூ.40.45 லட்சம் 'அபேஸ்'
திருச்சி, கே.கே.நகரை சேர்ந்தவர் நரசிம்மன், 71; ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவரது மொபைல் போனுக்கு சில வாரங்களுக்கு முன் பேசிய நபர், ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்தால், சில நாட்களிலேயே இரட்டிப்பாக்கி தருவதாக கூறியுள்ளார்.
நம்பிய நரசிம்மன், அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு தன் வங்கி கணக்கில் இருந்து, 40.45 லட்சம் ரூபாய் அனுப்பி உள்ளார். அதன்பின், அந்த நபரை தொடர்புகொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நரசிம்மன், திருச்சி மாநகர 'சைபர் கிரைம்' போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சிறுமியை பாலியலில் ஈடுபடுத்திய 4 பேர் கைது
கடலுார் மாவட்டம், ராமநத்தம் சர்வீஸ் ரோட்டில் உள்ள தனியார் லாட்ஜில் நேற்று காலை ராமநத்தம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு, 17 வயது சிறுமி, ஒரு பெண், நான்கு ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். விசாரணையில், 17 வயது சிறுமியை, அவரது உறவினர் பெண், ஈரோட்டிற்கு அழைத்து செல்வதாகக் கூறி, ராமநத்தத்தில் உள்ள லாட்ஜிற்கு அழைத்து வந்தது தெரியவந்தது.
சிறுமி அளித்த புகாரின்படி, ஐந்து பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, பெரம்பலுார் மாவட்டம், நமையூரைச் சேர்ந்த சேகர், 47, செங்குணம் சக்திவேல், 32, அயன்பேரையூர் கார்த்திக், 29, மற்றும் சிறுமியின் உறவுக்காரப் பெண் உட்பட நால்வரை கைது செய்தனர். தப்பியோடிய வேளாண் அதிகாரி ஜெயபால் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.