ADDED : நவ 27, 2024 10:41 PM

சென்னை: '' ரஜினி சினிமா சூப்பர் ஸ்டார். நான் அரசியல் சூப்பர் ஸ்டார், '' என மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
மதுராந்தகரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது: கங்கை கொண்டோம். கடாரம் கொண்டோம். சரிதான். ஆனால், காவிரியில் கொஞ்சம் தண்ணீர் கொள்ள முடியவில்லை. இது பெரும் அவலம். பாண்டியர், சோழர், சேரர் மூவேந்தர் ஒன்று சேர்ந்து போரிட்டு இருந்தால், உலகம் தமிழனின் உலகம். ஒருவரும் எதிர்நின்றிருக்க முடியாது. மன்னராட்சி காலத்தில் என்ன நடந்ததோ, மக்களாட்சி காலத்தில் அது தான் நடக்கிறது. காந்தியை, நேதாஜியை மறந்து விட்டார்கள்.
தமிழ் மக்கள் விழித்து கொள்ளவில்லை என்றால், இந்த இனத்தை பாதுகாக்க இனி எவனும் வர மாட்டான். நம்மை சுற்றி எவ்வளவு வேலை நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். நம்மை நோக்கி வரும் விமர்சனங்களை உரமாக்க வேண்டும். அதில் நமது லட்சியத்தை மரமாக்க வேண்டும். தலைவன் இல்லாத நாடாக இது தட்டுக்கெட்டு நிற்கிறது.
ரஜினியும், நானும் இரண்டரை மணி நேரம் பேசினோம். என்ன பேசினோம் என்பதை பற்றி நானும், அவரும் சொல்ல தேவையில்லை. அவரை சந்தித்ததால் நான் சங்கி ஆகிவிடுவேனா? உங்கள் வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கூப்பிட்டு பக்கத்தில் வைத்து கொள்கிறீர்கள். நான் சந்தித்து பேசியதும் கதறுகிறீர்கள். ஏனென்றால், ரஜினி சினிமா சூப்பர் ஸ்டார். நான் அரசியல் சூப்பர் ஸ்டார். நான் இல்லை என்றால் காட்டுப்பள்ளியில் துறைமுகம், எட்டு வழிச்சாலை வந்து இருக்கும். இவ்வாறு சீமான் பேசினார்.