நான் டீசன்ட் பாலிடீசியன் கிடையாது; டீப் பாலிடீசியன்: சொல்கிறார் சீமான்!
நான் டீசன்ட் பாலிடீசியன் கிடையாது; டீப் பாலிடீசியன்: சொல்கிறார் சீமான்!
ADDED : நவ 12, 2024 01:49 PM

நாகர்கோவில்: 'நான் டீசன்ட் பாலிடீசியன் கிடையாது... டீப் பாலிடீசியன். நான் பாலிசாக பாலிடிக்ஸ் செய்யமாட்டேன்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: அரசு நலத்திற்கு பெயர் வைக்க, கருணாநிதியை தவிர வேறு யாரும் முன்னோர்கள் இல்லையா? இவங்க அப்பாவுக்கு பின்னாடி தான் நாடும், மக்களுமா? ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க காசு கிடையாது. பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க காசு இல்லை. கேட்டால் காசு போதுமானதாக இல்லை என்று சொல்கிறீர்கள்.
எங்க அப்பாவுக்கு நான் சமாதி கட்டியிருக்கிறேன். உங்க அப்பாவுக்கு யார் காசுல சமாதி கட்டி இருக்கீங்க. என்னை தலைவனாக தேர்வு செய்கிற, நேசிக்கிறவர்கள், ஓட்டு செலுத்துகிற மக்கள் யார் என்று பாருங்கள். பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்களை தேடுபவர்கள் அல்ல என்னை விரும்புகிற மக்கள்.
ஜெயலலிதா, கருணாநிதி!
போராட்டக்களத்தில் தலைவனை தேடும் மக்கள் தான் என்னை பின் தொடர்வார்கள். காற்று அடிக்கும் திசையில் எல்லாம் பறக்கிற பதர்கள் எல்லாம் எனக்கு ஓட்டு செலுத்த மாட்டார்கள். புயலே அடித்தாலும் அதே இடத்தில் இருக்கிற நெல்மணிகள் ஏதுவோ அவர்கள் தான் எனக்கு ஓட்டு செலுத்துவார்கள்.
பயந்துட்டாரு அண்ணன் என்று சொல்கிறார்கள். ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் பொழுது கட்சியை ஆரம்பித்தவன் நான். அவர்களை விட இவர் (விஜய்) பெரிய தலைவரா? அவங்க இரண்டு பேரை விட இவங்களுக்கு கூட்டம் வந்ததா? ஒரு ரூபாய் காசு கொடுக்காமல் ஒன்ரை லட்சத்துக்கும் மேல் ஓட்டு வாங்கி இருக்கிறேன்.
சமஸ்கிருதம் சொல்
புது வேட்பாளர்களை நிறுத்தினேன். என்னை பாருங்கள் யார் பெரிய கட்சி. சரியாக ஒரு ஆண்டு தான் இருக்கிறது. 2026ம் ஆண்டு தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணும் போது, நான் எவ்வளவு தூரம் ஏறி வந்து இருக்கிறேன். எவ்வளவு தூரம் தொட்டு இருக்கிறேன் என்பதை பார்க்க போகிறீர்கள். திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதம் சொல். ஆரியத்தை எதிர்க்க வந்த திராவிடம் என்று சொல்கிறார்கள். திராவிடம் என்ற சொல்லே அவர்கள் சொல். திராவிடம் என்பதே பிராமணர்களை தான் குறிக்கிறது. திராவிடம் என்பது தமிழர் அல்லாதவர்கள். வசதியாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டு வரப்பட்டது.
டீப் பாலிடீசியன்
நான் டீசன்ட் பாலிடீசியன் கிடையாது... டீப் பாலிடீசியன். நான் பாலிசாக பாலிடிக்ஸ் செய்யமாட்டேன்.பாலிசியோடு தான் பாலிடிக்ஸ் செய்வேன். நெஞ்சு முழுக்க காயம். புரியுதா, வலி. பல ஆயிரம் ஆண்டுகளாக என் முன்னோர் தூக்கி சுமந்து வந்த கனவும் எங்களுக்கு தான் தெரியும். சும்மா போட்டு வேடிக்கையாக, அதுவும், இதுவும் ஒன்று. அங்கிட்டு, இங்கும் மண்ணு என்று பேசிட்டு இருக்க கூடாது.
உலக வெற்றிக் கழகம்
எல்லோரும் சமம், நிலம், மொழி, இனம் என்று எந்த பிரிவினையும் இருக்கக்கூடாது என்று விஜய் பேசுகிறார். கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என விஜய் பெயர் வைத்தது ஏன்? அகில இந்திய வெற்றிக் கழகம், உலக வெற்றிக் கழகம் என பெயர் வைக்க வேண்டியது தானே?
அடிப்படையே தவறு.
மொழியின் அடிப்படையிலேயே உலகம் முழுக்க அரசியல் கட்டமைக்கப்படுகிறது; இது விடுதலைப் போராட்டமா? பிரிவினையா? 8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். நாங்கள் அன்டர் கிரவுண்ட் வேலை செய்து வருகிறேன். நான் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டேன். தனித்து போட்டியிடுவதே மேன்மை என்று கருதுகிறேன்.
இரண்டு சட்டசபை தேர்தல், இரண்டு லோக்சபா தேர்தல், 10க்கும் மேற்பட்ட இடைத்தேர்தல்கள், இரண்டு உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் தோல்வியடைந்தேன். இத்தனை முறை தோற்ற பிறகும் ஒரு கட்சி, மீண்டும் தனித்து போட்டியிடுகிறது என்றால் அது, உலக வரலாற்றிலேயே நாம் தமிழர் கட்சி தான். உலகில் என் அளவுக்குத் தோற்றவர்கள் யாரும் கிடையாது. நான் மக்களை முழுமையாக நம்புகிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.

