200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் இறுமாப்புடன் சொல்கிறேன்: கனிமொழி
200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் இறுமாப்புடன் சொல்கிறேன்: கனிமொழி
ADDED : டிச 08, 2024 02:30 AM

துாத்துக்குடி: திருச்செந்துாரில் நேற்று நடந்த தி.மு.க., மாநில ஆதிதிராவிட நலக்குழு தென்மண்டல ஆய்வு கூட்டத்தில் கனிமொழி எம்.பி., பேசியதாவது:
தி.மு.க., மீது பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. உயர் ஜாதியினருக்கு எதிரானவர்கள் என்ற கட்டமைப்பை உருவாக்கி வருகின்றனர்.
இன்னொரு புறம், ஆதிதிராவிட மக்களுக்கு தி.மு.க., என்ன செய்ததது என கேள்வி கேட்கின்றனர். அனைத்து மதத்தினரும்; ஜாதியினரும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் கருணாநிதி சமத்துவபுரத்தை உருவாக்கினார். எல்லோரும் ஒன்றாக வாழ முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவரே அவர்தான்.
தி.மு.க., குறித்து வாட்ஸாப்பில் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். பல மாநிலங்களில் மக்களைப் பிரித்து குழப்பங்களை உருவாக்கி, சிலர் வெற்றிகளைப் பெற்று இருக்கின்றனர்.
இங்கேயும் நம்மைப் பிரிக்க சிலர் குழப்பம் செய்கின்றனர். அந்த குழப்பம் வந்துவிடாமல் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் எத்தனையோ சிறப்புமிகு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் முழு பலனையும், மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
அப்படி இருக்கையில், தி.மு.க., ஆட்சியில் செய்திருக்கும் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்றாலே போதும், முழு வெற்றியை பெற்று விடலாம்.
இந்த இடத்தில் கட்டுப்பாடுதான் முக்கியம். அந்தக் கட்டுப்பாட்டோடு தி.மு.க., தொண்டர்கள் களத்தில் பணியாற்றினால், 2026லும் தி.மு.க.,வுக்குத்தான் வெற்றி. முதல்வர் ஸ்டாலின் சொல்லி வருவதுபோல, 200 தொகுதிகளிலும் தி.மு.க., நிச்சயம் வெற்றி பெறும். இதை நானும் இறுமாப்போடு சொல்லிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.