நான் முதல்வன் திட்ட ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
நான் முதல்வன் திட்ட ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 21, 2025 06:37 PM
சென்னை:'நான் முதல்வன் போட்டி தேர்வு வழியே ஊக்கத்தொகை பெற, யு.பி.எஸ்.சி., முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்' என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு அறிவிப்பு:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தமிழக இளைஞர்கள், மத்திய அரசு வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வுகளை எளிதாக அணுக, பல பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
தமிழக திறன் மேம்பாட்டு கழகம், அகில இந்திய குடிமைப் பணி தேர்வு மையத்துடன் இணைந்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1,000 மாணவர்கள், மதிப்பீட்டு தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவர். அவர்கள், முதல்நிலை தேர்வுக்கு தயாராக, ஒவ்வொரு மாணவருக்கும், மாதம் 7,500 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
நடப்பாண்டு யு.பி.எஸ்.சி., முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், முதன்மை தேர்வு பயிற்சிக்கு, 25,000 ரூபாய் உதவித்தொகை பெற, நான் முதல்வன் போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு, https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/ என்ற இணையதளம் வழியே, ஜூலை, 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.