ADDED : டிச 21, 2024 11:31 PM

பனை விதைகள் நடுதல், விதை பந்துகள் வீசுதல் போன்ற பசுமை பணிகளில் ஈடுபட்டு வரும், வேலுார், ரங்காபுரத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் தினேஷ் சரவணன்: என் அப்பா, பால் வியாபாரி. நான், பி.இ., படிச்சிருக்கேன். என் அண்ணன், 2014-ல் திடீர் விபத்துல இறந்துவிட்டார். அதனால், அப்பாவோடு சேர்ந்து குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பால் வியாபாரம் செய்தபடியே வேலை தேடினேன்.
அண்ணனின் முதலாமாண்டு நினைவு நாளில், 1,000 மரக்கன்றுகள் வாங்கி, ஊர் பொது இடங்களில் நட்டு பராமரிக்க ஆரம்பித்தேன்.
அண்ணனின் நினைவுகள் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும். அதற்காக நாம் செய்யும் செயல், மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டினேன்.
நான் நட்ட மரங்கள் வளர்ந்து நிழல் கொடுக்க ஆரம்பித்ததால், மரம் வளர்ப்பில் ஆர்வம் அதிகமானது. வேலுாரை, பசுமை நகரமாக மாற்ற வேண்டும் என எண்ணி, நானே சைக்கிள் ரிக் ஷா ஓட்டிச்சென்று, வீட்டுக்கு ஒரு மரக்கன்று என, இலவசமாக வழங்கினேன்.
அந்த வகையில, கிட்டத்தட்ட 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்கியிருக்கிறேன். மேலும், ஆலம், அரசு, வேம்பு, வேங்கை, கடம்பு, மருது, வாகை, பூவரசு, இலுப்பை உள்ளிட்ட நாட்டு மர விதைகளை சேகரித்து, அதனுடன் மண், மணல், எரு கலந்து விதை பந்துகள் தயார் செய்து, மலை பகுதியில வீசினேன்.
வேலுார் சுற்று வட்டார மலைகளில் இதுவரை, 6.20 லட்சம் விதை பந்துகளை ட்ரோன் வாயிலாக துாவியிருக்கிறேன்.
கொரோனா காலத்துல இருந்து, வீட்ல இருந்தபடியே, மென்பொருள் நிறுவனத்துக்கான பணிகளை செய்ய ஆரம்பித்த பின், பசுமை செயல்பாடுகளில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்த முடிகிறது.
வேலுாரில் உள்ள மத்திய சிறை வளாகத்தில், 8,000 நாட்டு மரக்கன்றுகளை நட்டு குறுங்காட்டை உருவாக்கினேன்.
பாலாற்றில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றி துாய்மைப்படுத்த, என்னால் இயன்ற முயற்சிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறேன்.
வெயில் காலங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் தாகம் தீர்க்க, எங்கள் பகுதியில் வளரக்கூடிய மரங்களில் ஆயிரக்கணக்கான கொட்டாங்குச்சிகளை அமைத்து, தண்ணீர் ஊற்றுகிறேன். எங்கள் மாவட்டத்தை, சோலைவனமாக மாற்ற வேண்டும் என்பது தான், என் வாழ்க்கை லட்சியம்.
என் பசுமை பணியை பாராட்டி, தமிழக அரசு எனக்கு இரண்டாவது முறையாக, 'பசுமை முதன்மையாளர்' என்ற விருதும், 1 லட்சம் ரூபாய் வெகுமதியும் வழங்கி கவுரவித்து உள்ளது.
தொடர்புக்கு
97913 25230