கர்நாடகாவில் ஆயுத பயிற்சி பெற்றேன்: மாவோயிஸ்ட் வசந்த் வாக்குமூலம்
கர்நாடகாவில் ஆயுத பயிற்சி பெற்றேன்: மாவோயிஸ்ட் வசந்த் வாக்குமூலம்
ADDED : பிப் 21, 2026 06:58 AM

சென்னை: 'கர்நாடக வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சி பெற்றேன்' என, மாவோயிஸ்ட் வசந்த், கியூ பிரிவு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரள மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்த, ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் வசந்த், 37, என்பவரை, தமிழக 'கியூ' பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்:
நான் பொறியியல் படித்து உள்ளேன். எனக்கு, 16 ஆண்டுகளுக்கு முன், வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த, ராகவேந்திரா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவரது தந்தை வணிக வரித் துறையில், காசாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நானும் ராகவேந்திராவும், அடிக்கடி சந்தித்து அரசியல் பேசி வந்தோம். ராகவேந்திரா, மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து பணியாற்றி வந்தார்.
இதனால், பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். ராகவேந்திரா, தன் பெயரை வினோத்குமார், ரவிமுகேஷ் என, மாற்றி செயல்பட்டு வந்தார். ஆயுதப் போராட்டம் குறித்து, அவர் எனக்கு ரகசியமாக வகுப்பு எடுத்தார். அவர் வீட்டை விட்டு வெளியேறி, கேரள மாநிலத்திற்கு சென்று விட்டார். அங்குள்ள வனப்பகுதியில், மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வந்தார்.
இதனால், நானும் கடந்த, 2010ல் வீட்டை விட்டு வெளியேறினேன். அப்போது, தேனி மாவட்டம், பண்ணைபுரம் கார்த்திக், சந்தோஷ்குமார், ஷர்மிளா உள்ளிட்ட மாவோயிட்டுகளின் நட்பு கிடைத்தது. அவர்கள் ஏற்கனவே, ஆயுத பயிற்சி பெற்று இருந்தனர். அவர்களின் வழிகாட்டுதலின்படி, கர்நாடக வனப்பகுதியில், நானும் ஆயுத பயிற்சி பெற்றேன்.
கடந்த, 2021ல், கேரள மாநிலத்தில், வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆயுத பயிற்சி அளித்த ராகவேந்திரா, அம்மாநில போலீசாரிடம் சிக்கினார். அதன்பின் நாங்கள் சிதறுண்டோம். அடுத்தடுத்து, பண்ணைபுரம் கார்த்திக், சந்தோஷ்குமார் உள்ளிட்டோர், தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
நானும், ஐந்து மாவோயிஸ்ட்டுகளும், கடந்த ஆண்டு, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா முன் சரணடைந்தோம். பின், கேரள மாநில சிறையில் அடைக்கப்பட்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

