உரிமைக்கொடி ஏந்துவேன்; ஊர்ந்து போகமாட்டேன்: இ.பி.எஸ்., நையாண்டிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
உரிமைக்கொடி ஏந்துவேன்; ஊர்ந்து போகமாட்டேன்: இ.பி.எஸ்., நையாண்டிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
ADDED : மே 21, 2025 01:58 PM

சென்னை: ''தமிழகத்திற்கான நியாயமான நிதி உரிமையை நிடி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24ம் தேதி டில்லி செல்கிறேன். எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன். ஊர்ந்து போகமாட்டேன்'' என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
வரும் மே 24ம் தேதி இந்த ஆண்டிற்கான நிடி ஆயோக் கூட்டம், டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்திற்கான நியாயமான நிதி உரிமையை நிடிஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24ம் தேதி டில்லி செல்கிறேன். சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?
பா.ஜ., உடன் கூட்டணி கிடையாது என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறி வெள்ளைக்கொடி ஏந்திச் சென்ற பழனிசாமி, என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா? எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்.
ஊர்ந்து போகமாட்டேன். இன்றைக்குக் கூட, தமிழகத்தின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். தமிழகத்திற்கான நிதியைப் போராடிப் பெறுவேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.