ADDED : மே 12, 2025 01:56 AM

மாமல்லபுரம்: ''கூட்டணி குறித்து முடிவு செய்வதற்கு நான் இருக்கிறேன்; யாரும் கவலைப்பட வேண்டாம்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
வன்னியர் இளைஞர் சங்கம் சார்பில், 'இனமே எழு; உரிமை பெறு' என்ற தலைப்பில், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நடந்த சித்திரை முழுநிலவு மாநாட்டில் அவர் பேசியதாவது:
குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்கும். அதேபோல், 12 ஆண்டுகளுக்கு பின் கூடியிருக்கிறோம். மாநாட்டிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த, தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் நன்றி.
தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும் திறமை இளைஞர்களுக்கு உண்டு. நாம் தொடர்ந்து கேட்கிறோம். எனினும், 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கொடுப்பது போல தெரியவில்லை.
ஆசை இல்லை
மயிலே... மயிலே என்றால் இறகு போடாது; போராட்டத்தை அறிவிப்போம். போராட்டத்திற்கு, எவ்வளவு தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். நாமும் ஒரு முறை தமிழகத்தை ஆளவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
எனக்கு அந்த ஆசை இல்லை. அந்த ஆசை இருந்திருந்தால், நான் ஏதாவது மாநிலத்தின் கவர்னராக இருந்திருப்பேன். பலமுறை அமைச்சராக இருந்திருப்பேன். அந்த ஆசை இல்லாமல் போய்விட்டது. காந்தியை போல் கடைசி காலத்தில் தடி ஊன்றியாவது, இந்த மக்களுக்காக நான் உழைக்க வேண்டும்.
இங்கு வந்துள்ள இளைஞர்கள் மனது வைத்து, ஒவ்வொருவரும் 100 ஓட்டுகளை பெற்று தந்தால், சாதாரணமாக, 50 தொகுதிகளில் நம்மால் வெற்றி பெற முடியும். அதை நாம் செயல்படுத்த வேண்டும்.
இப்போதுள்ள நிர்வாகிகள், மாவட்டம், நகரம், ஒன்றியம் என பதவிகளை வைத்துக் கொண்டு ஏமாற்றுகின்றனர்; உழைக்காமல் வேறு எதையோ செய்கின்றனர்.
ஒவ்வொருவரும் தங்கள் உறவினர் ஓட்டுகளை பெற்று தந்தால், நாம் ஆட்சி பீடத்தில் உட்கார லாம். இவ்வளவு நாள், என் பேச்சை கேட்டீர்கள்; இடையில் மறந்தீர்கள். பொறுப்பில் உள்ளவர்கள் வேறு வேலைக்கு போய்விட்டனர்.
தனியாக யானை சின்னத்தில் போட்டியிட்டு, நான்கு தொகுதிகளை வென்றோம். கூட்டணியில் போட்டியிட்டு, ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இது அசிங்கமாக இருக்கிறது. நம் சொந்தங்கள் நமக்கு ஓட்டு போடவில்லை. இனி அப்படி நடக்கக் கூடாது. அப்படி இருப்போரின் பொறுப்புகளை பறித்து கணக்கை முடித்து விடுவேன்.
ஏமாற்ற முடியாது
மொபைல் போன் இல்லாத, ரியல் எஸ்டேட் செய்யாத, குடிக்காத இளைஞனை பதவியில் நியமித்து விடுவேன். எம்.எல்.ஏ., அப்படி செய்தால் துாக்கி கடலில் வீசி விடுவேன். சிலர் எந்த கூட்டணி என கேட்கின்றனர். கூட்டணி குறித்து முடிவு செய்வதற்கு நான் இருக்கிறேன்; யாரும் கவலைப்பட வேண்டாம்.
சீட் கிடைக்க வேண்டும்; எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்றால், நாளை முதல் உழைக்க வேண்டும். அப்படி உழைக்காத நிர்வாகிகளை மாற்ற ஒருவர் வருவார்; அவரை நான் நியமிப்பேன். அந்த கோஷ்டி; இந்த கோஷ்டி என்று சொல்லி, இனி ஏமாற்ற முடியாது.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.