ADDED : ஆக 27, 2025 02:25 AM

திருச்சி: ''என் பெயரிலோ, என் சம்பந்தப்பட்டவர்கள் பெயரிலோ, திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் அருகே 300 ஏக்கர் நிலம் இருந்தால், பழனிசாமி எடுத்துக் கொள்ளட்டும்,'' என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.
நேற்று திருச்சியில் அவர் அளித்த பேட்டி:
எவ்வளவோ நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் கலந்து கொள்கிறார்; அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு ஊடாக ஆம்புலன்ஸ் வந்தால், அவர் டென்ஷன் ஆவதில்லை.
அதன் அவசிய அவசரம் கருதி, உடனடியாக நிகழ்ச்சிக்கு சற்று இடைவெளி விட்டு, ஆம்புலன்சை போகச் செய்கிறார்; அதன்பின் தான், நிகழ்ச்சியை தொடருவார்.
இந்த நாகரிகம் தெரியாததால் தான், ஆம்புலன்ஸ் மீதான தாக்குதல்கள் நடக்கின்றன.
துறையூரில் பேசிய பழனிசாமி, திடுமென என்னை நோக்கி பாய்ந்திருக்கிறார். என் சொத்து மதிப்பை உயர்த்துவதற்காகவே, திருச்சி பஞ்சப்பூரில், புதிதாக பஸ் நிலையம் கட்டியிருப்பதாக பேசியுள்ளார். அப்பகுதியில் எனக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறியுள்ளார்.
பழனிசாமிக்கு சவால் விடுகிறேன். அவர் சொல்வதை நிரூபித்தால், என் சொத்து என குறிப்பிடுபவற்றை பழனிசாமியே எடுத்துக் கொள்ளட்டும்; உடனே, கையெழுத்து போட்டு தருகிறேன். இவ்வாறு நேரு கூறினார்.