UPDATED : ஜன 27, 2024 05:08 PM
ADDED : ஜன 27, 2024 02:27 AM

'சாப்பாடு இருக்கற இடத்துக்கு, பூனை வராது. நாம தான், அதோட இடத்துக்கு தேடி போய், சாப்பாடு வைக்கணும். வீட்டிற்கு ராஜான்னா பூனை தான்'' என்கிறார், கோவை குனியமுத்துாரைச் சேர்ந்த ஷபானா.
துறுதுறு கண்களோடு, உடல் முழுக்க ஷாப்ட்டான முடியுடன் ஒய்யாரமாய் வலம் வரும் பூனைகளை வளர்க்க, பலரும் விரும்புகின்றனர். கோவை, குனியமுத்துாரைச் சேர்ந்த ஷபானா ஐந்து ஆண்டுகளாக, 50க்கும் மேற்பட்ட பூனைகளை வளர்க்கிறார். பெர்சியன், லாங்ஹேர், பெங்கால், ரேக்டால் என, பல வகையான 26 பூனைகள் இவரது பெட்.
பூனைகளின் சைக்காலஜி குறித்து கேட்டவுடன், ஆர்வமாய் படபடத்தார். ''பூனையும் குழந்தை மாதிரி தான். நம்மோட எல்லா ஆக்டிவிட்டியும் உன்னிப்பா கவனிக்கும். வெளியில இருந்து வீட்டுக்கு வந்தா, என்ன 'மூடுல' இருக்கோம்னு தெரிஞ்சிக்கிட்டு, சேட்டையை தொடங்கிடும். பிற செல்ல பிராணிகள், சாப்பாடு இருக்கற இடத்தை தேடி போகும். ஆனா, பூனைங்க மட்டும், தன்னோட இடத்துக்கே சாப்பாடு வரணும்னு நினைக்கும். எங்க வளருதோ அந்த இடத்தோட ராஜாவா, பூனை தான் இருக்கும்.
இதோட அழகே, உடல் முழுக்க இருக்கும் ஷாப்ட்டான முடி தான். அது சாப்பிடுற உணவுல கிடைக்கற சத்துகள் 60 சதவீதம், முடி வளர்றதுக்கே செலவாகிடும். மீதமுள்ள 40சதவீதம் தான் பராமரிப்புக்கு எடுத்துக்கும். இதனால, ஹெல்தி டயட் அவசியம்.
என்னோட பூனைகள், பேஷன் ஷோக்களில் பங்கேற்று விருதுகள் வாங்கியிருக்கு. பூனை வளர்க்க ஆசைப்பட்டா, அதோட பராமரிப்பு முறையை, முழுமையா தெரிஞ்சிக்கணும். நாட்டு பூனைகள், இயல்பிலே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கறதால, பராமரிப்பு செலவு குறைவு தான்,'' என்கிறார் பெருமிதமாக.
ஓ அப்படியா
தகதகன்னு மின்னும் 'கோல்டன் பிஷ்'சின் நிறமும், முட்டை போன்ற அதன் கண்களையும் பார்த்து ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. இதற்கு பற்கள் இல்லாததால் உணவை தொண்டையில் நசிக்கி சாப்பிடும். தங்கமீன்களால் வெவ்வேறு வடிவங்கள், வண்ணங்கள், ஒலிகளை அறிய முடியும். மூன்று மாதங்கள் வரை ஒரு விஷயத்தை மறக்காது. இதை அடிப்படையாக கொண்டு, தங்கமீன்களுக்கு பயிற்சி கொடுக்க முடியுமாம்.
இதற்கு பசிக்கும் போது, கண்ணாடிக்கு முன்புறம் வருவது, வேகமாக ஓடுவது, வாய்விட்டு மேற்பரப்புக்கு வருவது போன்ற செயல்களில் ஈடுபடும் என, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'நேஷனல் ஜாக்ரபி' இணையதள ஆய்வுக்கட்டுரைகள் கூறுகின்றன.
முயல் வளர்க்க ஆசையா?
குழந்தைகளுக்கு பிடித்த வளர்ப்பு பிராணிகளில் முயலும் ஒன்று.
இது, 'சோசியல் அனிமல்' என்பதால், தனியாக வளர்ப்பதை விட இரண்டு, மூன்று முயல்களை சேர்த்து வளர்த்தால், அவை மகிழ்ச்சியாக இருக்கும். பிறந்து, 10-12 நாட்கள் கழித்து தான் கண்விழிக்கும். ஒருமாத காலம் வரை, தாயின் அரவணைப்பில் இருப்பது அவசியம். முயல்குட்டியின் காதை பிடித்தோ, பின்னங்கால் பிடித்தோ துாக்காமல் ஒருகையால் பிடறியை பிடித்து துாக்கி, மறுகையில் தாங்கி பிடித்து கொள்ள வேண்டும்.
முயல் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருப்பதால், தனியாக அறையோ அல்லது அதன் உயரத்தை விட, ஐந்து மடங்கு பெரிய கூண்டிலோ வளர்க்கலாம். சோர்வாக முயல் இருந்தால் அதன் தலையை தடவி கொடுப்பது, அணைத்து கொள்வது, ஓடவிட்டு விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், சுறுசுறுப்பாகிவிடும். 'கேப்ரோபெகி' அதாவது தன் கழிவையே சாப்பிடும் பழக்கம் முயலுக்கு இருப்பதால், அதன் ட்ரேயை, தினசரி சுத்தம் செய்வது அவசியம்.
தேனி மலையும்... ஜமுனா பாரியும்
நாய், பூனை, முயல், லவ்பேர்ட்ஸ் என பலவிதமான விலங்கு,பறவையினங்களை 'பெட்'டாக வீடுகளில் வளர்ப்பது வழக்கம். ஆனால் கோவை, விளாங்குறிச்சியைச் சேர்ந்த சதீஷின் வளர்ப்பு பிராணிகள் பட்டியல் சற்று வித்தியாசமானது. 'காப்பிக்கடை' உரிமையாளரான இவர் நாட்டு குதிரை, தேனி மலை மாடு, ஜமுனா பாரி ஆடு, சேவலை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.
அவர் கூறுகையில்:
நாட்டுக்குதிரையை வண்டி ஓட்டவும், ரேஸ்க்கும் வளர்க்கிறோம். குதிரை வளர்ப்பது தனி கலை. வண்டி ஓட்ட, நீச்சல் பயிற்சி வழங்குகிறோம். கொள்ளு, கோதுமை விரும்பி சாப்பிடுவதால் பராமரிப்பு செலவு குறைவுதான். தினசரி ரூ.150 வரை செலவாகும்.போட்டிகளுக்கு தயார்ப்படுத்தும் போது, செலவு இருமடங்காகும்.
அழிவின் விளிம்பில் உள்ள மாடுகளை வளர்க்க முடிவெடுத்தேன். தேனி மலை மாடு, ஜல்லிக்கட்டுகளில் பயன்படுத்துகிறோம். காங்கேயம் காளையும் வளர்க்கிறோம். ஜமுனா பாரி ஆடுகள் உள்ளன. இதன் குட்டிகள் வாயிலாக வருவாய் கிடைக்கிறது. இதுதவிர, பாக்சர், கிரேடன் உள்ளிட்ட நாய்கள், சேவலும் வைத்திருக்கிறோம். நாட்டு விலங்குகளை வளர்ப்பதே எங்கள் நோக்கம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பெட் கார்னிவல் வந்தல்லோ!
பெட் கண்காட்சி, தத்தெடுப்பு, குரூமிங்,பேஷன் ஷோ என, இன்றும், நாளையும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பதால், கொண்டாட்டத்திற்கு பஞ்சமிருக்காது. இதெல்லாம், எங்க? எப்போன்னு கேக்குற உங்க மைண்ட் வாய்ஸ் புரியுது.
கேரளாவில் உள்ள, கொச்சி ஃபாரம் மாலில், 'பல்ட்டு ஜான்வர்' பெட் கார்னிவல், இன்றும், நாளையும், காலை 10:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை நடக்கிறது. இதில், உங்கள் பெட்டுடன் பங்கேற்கலாம். நாய், பூனை, குதிரை, லவ் பேர்ட்ஸ், என அரங்கமே பெட்ஸ்களால் நிறைந்திருக்கும். பெட்ஸ்களுக்கு எப்படி வீட்டில் பயிற்சி அளிப்பது, தத்தெடுப்பு, குரூமிங் முறைகள் குறித்து, உரிமையாளர்களுக்கு சொல்லி கொடுக்கிறார்கள்.
கலர்புல் உடையில், கூலிங் கிளாஸ் அணிந்து, ஸ்டைலாக கேட்வாக்கில் வலம் வரும் உங்க நாய்க்குட்டியை, மாலை 6:30 மணி முதல் இரவு, 9:00 மணி வரை நடக்கும், பேஷன் ஷோவில் பங்கேற்க செய்யலாம். நேரடி முன்பதிவு மட்டுமே நடக்கிறது. கூடுதல் தகவல்களுக்கு, 89217 49499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
.

