'அன்னை இல்லம் வீட்டில் உரிமை கோர மாட்டேன்': பிரபு அண்ணன் மனு தாக்கல்
'அன்னை இல்லம் வீட்டில் உரிமை கோர மாட்டேன்': பிரபு அண்ணன் மனு தாக்கல்
ADDED : ஏப் 09, 2025 03:58 AM

சென்னை : 'நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டின் மீது, எந்த உரிமையும் கோர மாட்டேன்' என, அவரது மூத்த மகன் ராம்குமார் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண மனு தாக்கல் செய்யப்பட்டது.
நடிகர் சிவாஜியின் பேரன் துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர், 'ஈசன் சினிமா' தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்நிறுவனம், 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தது. பட தயாரிப்புக்காக, 'தனபாக்கியம் எண்டர்பிரைசஸ்' நிறுவனத்திடம் இருந்து, துஷ்யந்த் 3.75 கோடி ரூபாய் கடன் பெற்றார்.
அதை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து 9.02 கோடி ரூபாய் செலுத்த ஏதுவாக, படத்தின் உரிமைகளை, கடன் வழங்கிய நிறுவனத்திடம் ஒப்படைக்க, கடந்த ஆண்டு மத்தியஸ்தர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை செயல்படுத்தவில்லை என, உயர் நீதிமன்றத்தில் தனபாக்கியம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை நீக்கக்கோரி, நடிகர் பிரபு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி அப்துல் குத்துாஸ் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராம்குமார் சார்பில், 'அன்னை இல்லத்தின் மீது, எனக்கு எந்த உரிமையும் இல்லை. வீட்டை தம்பி பிரபுவுக்கு, தந்தை உயில் எழுதி வைத்துள்ளார்' என, பிரமாண மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நடிகர் பிரபு மற்றும் வழக்கு தொடர்ந்த நிறுவனம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. வாதங்கள் நிறைவு பெறாததால், வரும், 15ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.