ரசிகர்களின் அன்பை தவறாக பயன்படுத்த மாட்டேன்: அஜித் உறுதி
ரசிகர்களின் அன்பை தவறாக பயன்படுத்த மாட்டேன்: அஜித் உறுதி
ADDED : ஆக 03, 2025 06:38 PM

சென்னை: '' உங்கள் அன்பை என் சுயலாபத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த மாட்டேன்,'' என நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.
33 ஆண்டுகள்
தமிழ் சினிமா பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். கடந்த 1993ம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானது. இன்றுடன் அவர் திரைப்பயணத்தில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். திரை வரலாற்றில் பல வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ள அஜித்குமார், தற்போது கார் ரேசிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அஜித்குமார் ரசிகர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் சினிமா ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்திற்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.
இந்தப் பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்தத் துறைக்கு எந்தப் பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல்தான் நுழைந்தேன். முழுக்க முழுக்க என் சுய முயற்சியால் மட்டுமே சினிமாத் துறைக்குள் நுழைந்தேன். காயங்கள், மீண்டு வருதல், தோல்வி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. ஆனால், நான் தளர்ந்து போகவில்லை. முயற்சி செய்தேன், மீண்டு வந்தேன், தொடர்ந்து முன்னேறுகிறேன்!
முடிந்துவிடவில்லை
ஏனெனில், விடாமுயற்சி என்பதை வெறுமனே நான் கற்றுக் கொள்ளவில்லை. அதை பரிசோதித்து அவ்வண்ணமே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். எண்ணில் அடங்காத அளவுக்கு வெற்றியும் தோல்வியும் சினிமாவில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் வெற்றி மீது நான் சந்தேகம் கொள்ளும்போதும் உங்கள் அன்புதான் என்னை மீண்டு வர செய்துள்ளது. இந்த அன்புக்கு என்றும் உண்மையாக இருப்பேன். இந்த அன்பை எப்போதும் இறுகப் பிடித்திருப்பேன். ஆனால், என் பயணம் சினிமாவோடு முடிந்துவிடவில்லை.
மோட்டார் ரேசிங் உலகில் வேறுவிதமான சவால்களை எதிர்கொண்டேன். அந்த டிராக் நீங்கள் யார் என்பதை பொருட்படுத்தாது, மன்னிக்காது. அதற்கு தேவை Respect, Focus & Grit! அந்த டிராக்கில் பல முறை ரத்தம் வரும் அளவுக்கு விபத்து ஏற்பட்டது. என்னை பலமுறை தூக்கி எறிந்திருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து பயணிக்கிறேன். இந்த பயணம் விருதுகளுக்காகவோ அல்லது தலைப்பு செய்திகளுக்காகவோ அல்ல. ஒழுக்கம், துணிவு மற்றும் ஒரு குறிக்கோளுக்காக ஏற்படும் வலி என இவற்றின் மூலம் என்னை எனக்கே நிரூபிக்க பயணிக்கிறேன். வீரம் மிக்க நாட்டின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன்.
'அஜித்குமார் மோட்டார் ரேசிங்' என்ற பெயரில் 2025 ஆம் ஆண்டு மீண்டும் விளையாட்டுத் துறைக்கு மட்டும் நுழையவில்லை. வயது வரம்பு, அச்சம் தடைகள் இதைப்பார்த்து தங்கள் மீதே சந்தேகம் கொள்பவர்களுக்கு கொடுக்கவும்தான் விளையாட்டுத் துறைக்குள் மீண்டும் வந்தேன். உத்வேகம். நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான். நன்றி! உங்கள் அன்பை என் சுயலாபத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த மாட்டேன்.
நான் பல சமயங்களில் அதிகம் வெளியே வராமலும் பேசமாலும் இருக்கலாம். ஆனால் சினிமா மட்டுமல்ல மோட்டார் பந்தயத்திலும் முழு கவனம் செலுத்தி உங்களை மகிழ்விக்க தவறியது இல்லை.