நான் சொல்பவர்களுக்கு மட்டுமே டெண்டர் தரணும்; தி.மு.க., ஒன்றிய செயலாளர் பேசும் ஆடியோ வைரல்
நான் சொல்பவர்களுக்கு மட்டுமே டெண்டர் தரணும்; தி.மு.க., ஒன்றிய செயலாளர் பேசும் ஆடியோ வைரல்
UPDATED : டிச 07, 2024 10:16 PM
ADDED : டிச 07, 2024 04:22 PM

உடுமலை: உடுமலை ஒன்றிய குழு தலைவரின் கணவரை, உடுமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் தங்கராஜ் என்ற மெய்ஞான மூர்த்தி, மொபைல்போன் மூலம் டெண்டர் தொடர்பாக மிரட்டும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய தலைவராக இருப்பவர் மகாலட்சுமி முருகன். இவரது கணவரை மொபைல்போன் மூலம் தொடர்பு கொண்ட தங்கராஜ் என்ற மெய்ஞான மூர்த்தி, டெண்டரை தங்களுக்கு கூறும் நபர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனக்கூறி மிரட்டல் தொனியில் பேசியுள்ளார்.
அதில், தங்கராஜ் என்ற மெய்ஞான மூர்த்தி பேசும்போது, நான் கொடுத்த லிஸ்ட்டில் உள்ளவர்களுக்கு வேலையை கொடுக்க வேண்டும். உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கிக் கொண்டு நான் சொல்லும் ஆட்களுக்கு வேலையை கொடுக்க வேண்டும். மாற்றி யாருக்காவது கொடுத்தால், கெட்ட கோபம் வரும். உங்கள் மேல் உள்ள மரியாதை முறிந்துவிடும்.
வேண்டாத வேலையெல்லாம் செய்ய வேண்டாம். நான் யாருக்கு சொல்கிறோமோ அதை செய்யுங்கள். நான் என்ன சொல்றேனோ அதை கேட்க வேண்டும். மாத்தி செய்தால் சங்கடம் தான் வரும். நீங்க இதை மீறி செய்துவிட்டுபோனால் செய்துட்டு இதோடு போங்கள் வராதீங்க எனக்கூறுகிறார். மறுமுனையில் பேசுவதை இவர் சரியாக கேட்காமல், தான் சொல்வதை மட்டும் செய்ய வேண்டும் என கோபத்துடன் கூறும் அவர், தான் சொல்லும் நபர்களுக்கு மட்டுமே ஒப்பந்தத்தை வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார்.
இது குறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.