'சிலீப்பர்' வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க ஐ.சி.எப்., முடிவு
'சிலீப்பர்' வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க ஐ.சி.எப்., முடிவு
ADDED : மார் 19, 2025 04:45 AM

சென்னை: ஐ.சி.எப்., ஆலையில், இருக்கை வசதி உடைய, வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை குறைத்து, 'சிலீப்பர்' வசதியுள்ள வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க, ஐ.சி.எப்., நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை ஐ.சி.எப்., எனப்படும், ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில, வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படுகிறது. இந்த ரயில்கள், பயணியர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதுவரை, 77 வந்தே பாரத் ரயில்கள், நாட்டின் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் - மைசூர், கோவை, எழும்பூர் - திருநெல்வேலி, நாகர்கோவில் உட்பட எட்டு வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து ரயில்களிலும், பயணியர் கூட்டம் அதிகமாக உள்ளது. இவை அனைத்தும் இருக்கை வசதி உடையவை. அதனால், இரவுநேர ரயில்களாக இயக்க முடியவில்லை.
இதுகுறித்து, ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது: வந்தே பாரத் ரயில்களுக்கு, பயணியர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நீண்ட துாரம் பயணம் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் சிலீப்பர் வந்தே பாரத் ரயில், விரைவில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.
இனி, சிலீப்பர் ரயில்களின் தயாரிப்பை அதிகரிக்க உள்ளோம். இருக்கை வசதி உடைய வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு, படிப்படியாக குறைக்கப்படும். ஏனெனில், அதற்கான தேவை தற்போது போதுமானதாக இருக்கிறது. சிலீப்பர் வந்தே பாரத் ரயில்களின் தேவை அதிகமாக உள்ளது.
பல்வேறு ரயில்வே மண்டலங்களிலும், சிலீப்பர் ரயில்கள் இயக்குவதற்கான பட்டியல், ரயில்வே வாரியத்திடம் அளிக்கப்படுகிறது. 16 பெட்டிகள், 24 பெட்டிகள் என இரண்டு வகையான, சிலீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில், 50 சிலீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் வகை ரயில்களை, ரயில்வேயின், இதர தொழிற்சாலைகளிலும் தயாரிக்க கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.