சிதம்பரம் கோவில் வரவு - செலவு விபரம் கேட்கிறது ஐகோர்ட்
சிதம்பரம் கோவில் வரவு - செலவு விபரம் கேட்கிறது ஐகோர்ட்
UPDATED : பிப் 22, 2024 04:23 AM
ADDED : பிப் 22, 2024 02:52 AM

சென்னை:சிதம்பரம் நடராஜர் கோவிலின் மூன்றாண்டு வரவு- -- செலவு கணக்கு விபரங்களை தாக்கல் செய்யும்படி, பொது தீட்சிதர் குழுவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'அனுமதி பெறாமல், கோவிலுக்குள் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ள, பொது தீட்சிதர் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்.
'தணிக்கை மேற்கொள்ள கணக்குகளை சமர்ப்பிக்கும்படி, பொது தீட்சிதர் குழு செயலருக்கு உத்தரவிட வேண்டும்' என, ஹிந்து அறநிலையத் துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''சட்ட விரோதமாக கட்டுமானம் செய்ய மாட்டோம்; அவ்வாறு நடந்தால், உடனே பணிகள் நிறுத்தப்படும் என, தீட்சிதர்கள் குழு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், அதை மீறி கட்டுமானங்களை மேற்கொள்கின்றனர்,'' எனக் கூறி, அதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.
மேலும், ''கோவில் நிர்வாகம் சார்பில் 2023 - -24ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கலில், 2.09 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஆருத்ரா தரிசன விழாவின்போது மட்டும், 6 லட்சம் ரூபாய் வரை வருவாய் வருகிறது.
''சிறிய கோவிலில் கூட, ஆண்டு வருவாய் அதிகமாக இருக்கும்போது, பிரசித்த பெற்ற இக்கோவிலில் குறைந்த அளவில் வருவாய் எப்படி இருக்கும்?'' என்றும், கேள்வி எழுப்பினார்.
அதற்கு பொது தீட்சிதர்கள் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர், ''சட்ட விரோதமாக கட்டுமானம் நடக்கவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, கோவில் நிர்வாகத்தில் மறைமுகமாக அறநிலையத் துறை தலையிட முயற்சிக்கிறது. வரவு - செலவு தணிக்கை செய்யப்படுகிறது,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை மீறி நடந்தால், கடும் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்தனர். கோவிலின் கடந்த மூன்றாண்டு வரவு - செலவு, வருமான வரி தாக்கல் விபரங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.