ADDED : பிப் 27, 2024 11:15 PM
சென்னை:''பணியின் போது உயிர்இழக்கும் அரசு டாக்டர்களின் வாரிசுகள் விண்ணப்பித்தால், அரசு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில், அரசு மருத்துவ மனைகளில் பணியின் போது, உயிரிழந்த ஏழு டாக்டர்களின் குடும்பத்திற்கு, அரசு டாக்டர்களின் பங்களிப்புடன் கூடிய சேமநல நிதியாக தலா 1 கோடி ரூபாய்க்கான காசோலையை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் எதிர்பாராத வகையில் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பங்களை சார்ந்த வாரிசுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்க, அரசு டாக்டர்களின் விருப்ப பங்களிப்பு நிதி, 2020ல் இருந்து செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, ஒவ்வொரு டாக்டரும் விருப்பத்தின் அடிப்படையில், மாதந்தோ றும், 500 ரூபாய் வழங்கி வருகின்றனர். இத்திட்டத்தில், 2,000 டாக்டர்கள் மட்டுமே இணைந்திருந்த நிலையில், 11,000 டாக்டர்கள் விருப்பம் தெரிவித்து இணைந்துள்ளனர். மற்ற டாக்டர்களும் படிப்படியாக இணைய உள்ளனர்.
இத்திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. கடந்த, 2022ல் பணியின் போது உயிர்இழந்த ஏழு அரசு டாக்டர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
பணி காலத்தில் இறந்தவர்களின் குடும்ப வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. அரசை பொறுத்தவரையில், கருணை அடிப்படையில் பணி நியமனம் அனைத்து துறைகளிலும் வழங்கப்படுகிறது.
கருணை அடிப்படையில், டாக்டர்களின் நேரடி வாரிசுதாரர்களுக்கு பணி வழங்குவதில், கல்வி தகுதிக்கேற்ப பணி வழங்குவதில் விதிமுறைகள் இல்லை. அதேநேரம், மூன்று வகையான பணி நியமனங்கள் வழங்குவதில் விதிமுறைகள் உள்ளன.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் ஆகிய மூன்று வகையான பணியிடங்களை டாக்டர்களின் வாரிசுதாரர்கள் விண்ணப்பித்தால் உடனடி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இளநிலை உதவியாளர் பணியிடங்களில், அதிகமான காலிப்பணியிடங்கள் இல்லாத சூழலில், அந்த பணியிடங்களுக்கு காத்திருக்காமல், ஆறு மாதம் தட்டச்சர் பயிற்சி பெற்று, அவற்றிற்கு விண்ணப்பிக்க வேண்டும். இரண்டும் ஒரே மாதிரியான சம்பளம் என்பதால், உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

