ADDED : ஜூன் 29, 2025 04:59 AM
'மெனோபாஸ்' பெண்கள் எதிர்கொள்ளும் உடல் உபாதைகளுக்கு தீர்வு என்ன.
- -மகேஸ்வரி, மதுரை
பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு உள்ள காலத்தை 'மெனோபாஸ்' காலம் என்கிறோம். 45 முதல் 55 வயதிற்குள் எப்போது வேண்டுமானாலும் மாதவிடாய் திடீரென நிற்கலாம். அதற்கு பிறகு 'மெனோபாஸ்' வரும் போது பெண்கள் தங்கள் உடல்நலனில், முன்பை விட அதிக கவனம் செலுத்த வேண்டும். மாதவிடாய் நிற்கும் போது 'ஈஸ்ட்ரஜன்' என்ற ஹார்மோன் சுரப்பது குறைவதால் இதுவரை பெண்களுக்கு இருந்த உடல்ரீதியான பாதுகாப்பு குறையும். இதய ரத்தகுழாய் அடைப்பு, எலும்பு தேய்மானம், கால்சியம் குறைவு, பெண் உறுப்பில் வறட்சி, சிறுநீர்ப் பாதை தொற்று, உடல் திடீரென வெப்பமாகி தலைவலி வருதல், தோலில் வறட்சி போன்ற பிரச்னைகள் உருவாகும்.
உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாத பெண்களும் மாதவிடாய் நின்ற பின், தினமும் அரைமணி நேரம் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா ஏதாவது ஒன்றை கட்டாயம் செய்ய வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உணவில் கவனம் செலுத்த வேண்டும். நீர்ச்சத்துள்ள காய்கறி, பழங்கள், கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
- டாக்டர் கே.ஹேமலேகாமகப்பேறு, மகளிர் நல சிறப்பு நிபுணர், மதுரை
30 வயதாகும் எனக்கு படிக்கும் காலத்தில் இருந்தே மனதை கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படுகிறேன். எளிதாக கவனம் சிதறி நினைவுகள் எங்கெங்கோ செல்வதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. மனதை கட்டுப்படுத்த வழி கூறுங்கள்.
-- மகேஷ், வடமதுரை
மன சிதறல் என்பது ஒரு குறிப்பிட்ட செயல்களில் கவனம் செலுத்த முடியாமலிருப்பது. இதில் முக்கியமான விஷயம் என்பது எந்த மாதிரியான எண்ணங்கள் உங்களை திசை திருப்புகின்றன என கவனிக்க வேண்டும். அந்த சிந்தனைகள் ஒவ்வொன்றாக வராமல் இருக்க தினசரி வாழ்க்கையை சீராக திட்டமிட்டு அந்த பணிகளை செய்வதற்கென குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். தியானம், யோகா போன்றவை உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த உதவும். ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இதை ஒரு கட்டாய பயிற்சியாக செய்யுங்கள். உங்களிடம் மாற்றம் ஏற்படும்.
- டாக்டர் ஆர்.பாலகுருமூளை நரம்பியல் மன நல மருத்துவர், வடமதுரை
எனது கணுக்கால்களில் நீண்ட நாட்களாக வீக்கமாக உள்ளது. அதற்கான காரணமும், தீர்வும் என்ன.
-- ஆர்.ரவீந்தரன், கூடலுார்
கணுக்காலில் தொடர்ந்து வீக்கம் இருந்தால் இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி பரிசோதனை அவசியம். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, நுரையீரல் தன்மை குறித்து முழு அளவிலான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். உப்புச்சத்து அதிகம் உள்ளவர்களுக்கு இதயம் வெகுவாக பாதிக்கப்படும். இதில் எந்த வகையான பாதிப்பு என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதைக் கண்டு கொள்ளாமல் விட்டால் காலுக்குச் செல்லக்கூடிய ரத்தம் அடைப்பு ஏற்படும். இதனால் கணுக்காலில் வீக்கம் அறிகுறியாக தெரியும். இது தவிர ரத்த சோகை உள்ளவர்களுக்கும் கால் வீக்கம் ஏற்படும்.
-- டாக்டர் காஞ்சனாஅரசு மருத்துவர்அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கூடலுார்
-அடிக்கடி வயிற்று வலியும், வாந்தியும் ஏற்படுகிறது. இதற்கான தீர்வு என்ன.
- என்,சங்கீதா, ராமநாதபுரம்
பொதுவாக வலது பக்கம் மேல்வயிறு, முதுகுவலியும் இருக்கும். 40 வயது கடந்த உடல் பருமன் உள்ள பெண்களுக்கு அதிகளவில் பித்தப்பையில் கல் பாதிப்பு ஏற்படும். இதனால் தான் வயிற்று வலி, வாந்தி போன்றவை ஏற்படுகிறது. சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமல் இருப்பது. நெய் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது. பாஸ்ட் புட் எடுத்துக்கொள்வதால் பித்தப்பையில் கல் ஏற்படும்.
இது பித்தப்பாதையில் மாட்டிக்கொண்டால் மஞ்சள் காமாலை பாதிப்பை ஏற்படுத்தும். இது போன்ற தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஸ்கேன் பரிசோதனை செய்தால் பித்தப்பையில் உள்ள கற்கள் பற்றி தெரியும்.
பெரிய கல் ஒன்று மட்டுமே உருவாகும். சிறிய கற்கள் அதிகளவில் உருவாகும். பெரிய கற்கள் நகர்ந்து பித்தப்பையை அடைக்காது. சிறிய கற்கள் நகர்ந்து பித்தப்பையை அடைத்து சிக்கலை ஏற்படுத்தும். எண்டாஸ்கோபி அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையானது கல்லுடன் அகற்றப்படும்.
ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும். தற்போதைய தொழில் நுட்பத்தில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பபையில் உள்ள கல்லை அப்புறப்படுத்தலாம்.
-டாக்டர் எம்.ஜி.ேஷக் அப்துல்லா பொது அறுவை சிகிச்சை மருத்துவர், ராமநாதபுரம்
உடலில் தொடர்ந்து அரிப்பு இருந்து வருகிறது. எதனால் வருகிறது, எப்படி குணப்படுத்துவது
- -மகேஸ்வரன், காரியாபட்டி
பொதுவாக இந்த சீதோஷ்ண நிலைக்கு உடலில் அதிகம் வியர்க்கக்கூடிய பகுதிகளில் அரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே போல் வயதுக்கு ஏற்றார் போல் ஒரு சிலருக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருந்தாலும் அரிப்பு ஏற்படும். உடம்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதை சரியாக கவனிக்காவிட்டால் படர்தாமரை வர காரணமாக அமையும். அரிப்பு ஏற்படாமல் இருக்க இருவேளை குளிக்க வேண்டும். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிகம் வியர்க்க விடக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப உணவு கட்டுப்பாடுகள் வேண்டும். கத்தரிக்காய், கருவாடு உள்ளிட்டவைகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
- டாக்டர் குருச்சந்தர்காரியாபட்டி