புதுசா வழக்கறிஞர்கள் உருவானால் அவங்களுக்கு வேலை கிடைக்காது: அமைச்சர் ரகுபதி
புதுசா வழக்கறிஞர்கள் உருவானால் அவங்களுக்கு வேலை கிடைக்காது: அமைச்சர் ரகுபதி
ADDED : மார் 29, 2025 02:55 AM

சென்னை: ''கூடுதல் சட்டக் கல்லுாரி துவங்கி, அதிக அளவில் வழக்கறிஞர்கள் பதிவு செய்தால், அவர்களுக்கான தொழில் வாய்ப்பில் பாதகமான சூழல் ஏற்படும் என்பதால், புதிய சட்டக் கல்லுாரிகள் துவக்குவது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,'' என, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - செந்தில்நாதன்: சிவகங்கை நகரில், சட்டக் கல்லுாரி துவக்க வேண்டும்.
அமைச்சர் ரகுபதி: அருகில் உள்ள காரைக்குடியில் சட்டக் கல்லுாரி உள்ளது. எனவே, புதிதாக சிவகங்கையில் துவக்க சாத்தியக்கூறு இல்லை.
செந்தில்நாதன்: வழக்கறிஞர் சேம நல நிதி முத்திரை கட்டணம், நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே, வழக்கறிஞர் சேம நல நிதியை, 40 லட்சம் ரூபாயாக, குமாஸ்தாக்கள் சேம நல நிதியை, 20 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். காளையார் கோவில் ஒன்றியத்தில், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் ரகுபதி: உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தால், காளையார் கோவிலில் நீதிமன்றம் துவங்குவது பரிசீலிக்கப்படும். வழக்கறிஞர் சேம நல நிதி, குமாஸ்தா சேம நல நிதி முத்திரை கட்டணம், பார் கவுன்சில் ஒப்புதலுடன் உயர்த்தப்பட்டுஉள்ளது.
அ.தி.மு.க., - கே.பி.முனுசாமி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரு சட்டக் கல்லுாரி துவக்க வேண்டும்.
அமைச்சர் ரகுபதி: தற்போது தமிழகத்தில் 15 அரசு சட்டக் கல்லுாரிகள், 12 தனியார் சட்டக் கல்லுாரிகள் உள்ளன.
இவற்றில் ஐந்தாண்டு சட்டப் படிப்பில், 36,640 பேர்; மூன்றாண்டு சட்டப்படிப்பில், 11,910 பேர் என, மொத்தம் 48,550 மாணவர்கள் படிக்கின்றனர். வழக்கறிஞர்கள் எண்ணிக்கை, நீதிமன்றத்தில் பதிவாகும் வழக்குகள் எண்ணிக்கை ஆகியவற்றுக்கான இடைவெளி அதிகமாக உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில், 1.75 லட்சம் வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். ஆண்டுக்கு 9,000 வழக்கறிஞர்கள் புதிதாக வருகின்றனர்.
எனவே, கூடுதல் சட்டக் கல்லுாரி துவங்கி, அதிக அளவில் வழக்கறிஞர்கள் பதிவு செய்தால், அவர்களுக்கான தொழில் வாய்ப்பில் பாதகமான சூழல் ஏற்படும்.
வேலை வாய்ப்பின்மைக்கு காரணியாக அமைந்து விடும். எனவே, புதிதாக சட்டக் கல்லுாரி துவங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.