கட்சியினரை கைது செய்வதால் தி.மு.க., அழிந்துவிடாது : கோவை சிறை வாசலில் ஸ்டாலின் பேட்டி
கட்சியினரை கைது செய்வதால் தி.மு.க., அழிந்துவிடாது : கோவை சிறை வாசலில் ஸ்டாலின் பேட்டி
UPDATED : ஆக 06, 2011 12:21 AM
ADDED : ஆக 05, 2011 10:26 PM

கோவை : ''கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பதால், தி.மு.க., அழிந்துவிடாது,'' என, கோவை சிறை வாசலில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.
நில அபகரிப்பு புகாரில் கைதான முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், ராஜா, ஈரோடு மேயர் குமார் முருகேஷ், எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன், கோவை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்தன், ஈரோடு மாவட்ட தி.மு.க., துணைச் செயலர் விஸ்வநாதன் உள்ளிட்ட தி.மு.க.,வினர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, கட்சி பொருளாளர் ஸ்டாலின் நேற்று கோவை வந்தார். காலை 10 மணிக்கு சிறைக்குள் சென்ற ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்களை சந்தித்து விட்டு வெளியே வந்தார்.
சிறைக்கு வெளியே ஸ்டாலின் அளித்த பேட்டி: ரியல் எஸ்டேட் தொழிலில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் தி.மு.க.,வினரை மட்டும் பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பதை அ.தி.மு.க., அரசு தொழிலாகக் கொண்டுள்ளது. அ.தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீது கூட நில அபகரிப்பு புகார் வந்துள்ளது. ஆனால், சம்பந்தப்பட்டவர்களை அழைத்து போலீசார் சமரசம் செய்து விடுகின்றனர். இதை சட்டப்படி சந்திப்போம். கட்சி மீதும், கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு அ.தி.மு.க., அரசு பயமுறுத்திப் பார்க்கிறது. இதனால், தி.மு.க., அழிந்துவிடாது; கட்சியினரும் பயப்பட மாட்டார்கள். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.