மக்கள் 'நோ' சொன்னால் டாஸ்மாக் கடையை மாற்றுங்க; ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மக்கள் 'நோ' சொன்னால் டாஸ்மாக் கடையை மாற்றுங்க; ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ADDED : நவ 19, 2024 03:39 AM

சென்னை: 'பொதுமக்கள் டாஸ்மாக் கடை வேண்டாம் என்றால், அந்தக்கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும்' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், குத்தகை காலம் நிறைவு பெற்று விட்டால், கடையை காலி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி, டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது.
நெருக்கடி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமன்தொட்டி கிராமத்தில், சுந்தர் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில், டாஸ்மாக் கடை வாடகைக்கு இயங்கி வருகிறது.
கடை வாடகை ஒப்பந்தம், 2019ல் முடிவடைந்தது. இதையடுத்து, கடையை காலி செய்யும்படி டாஸ்மாக் நிர்வாக மேலாளருக்கு, சுந்தர் நெருக்கடி கொடுத்ததால், அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது, கர்நாடக மாநில மது பானத்தை வாங்கி வந்து, திருட்டுத்தனமாக விற்றதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுந்தர் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், 'மாநிலம் முழுதும் வாடகை ஒப்பந்த காலம் முடிந்த பின்னும் காலி செய்யாமல், எத்தனை டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன என்ற விபரங்களை, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராகி விவரிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் நேரில் ஆஜரானார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என்.மனோகரன் ஆஜராகி, 'மனுதாரருக்கு சொந்தமான கடையை, டாஸ்மாக் நிர்வாகம் காலி செய்து விட்டது' என்றார். டாஸ்மாக் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், வழக்கறிஞர் சதீஷ்குமார் ஆகியோர் ஆஜராகினர்.
முகாந்திரமும் இல்லை
இதையடுத்து நீதிபதி சில கேள்விகளை எழுப்பினார். '2019ல் குத்தகை காலம் முடிந்தும், கடையை காலி செய்யாதது ஏன்; கடையை காலி செய்ய சொன்னால், கட்டட உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வீர்களா; கேள்வி கேட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா; இதுபோல எத்தனை கடைகள் காலி செய்யப்படாமல் உள்ளன.
'டாஸ்மாக் கடை வேண்டாம் என, மக்கள் போராடினால், போலீசாரை வைத்து கடை நடத்துவீர்களா; இதுபோல மீண்டும் புகார் வந்தால், அது தீவிரமாக கருதப்படும்.
'அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல் சட்டத்தை, அரசு தன் சொத்துக்கு பயன்படுத்தும் போது, தனிநபர் தனக்கு தெரிந்த சட்டத்தை பயன்படுத்தக்கூடாதா' என்றும் நீதிபதி கேட்டார்.
ஒப்பந்தம் காலம் முடிந்து, கட்டட உரிமையாளர், கடையை காலி செய்ய கோரினால், டாஸ்மாக் நிர்வாகம் காலி செய்ய வேண்டும். பொதுமக்கள் டாஸ்மாக் கடை வேண்டாம் என்றால், அந்த கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்.
வழக்குக்காக, கிருஷ்ணகிரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், மதுபான பாட்டில்களை விற்பனை செய்யும் போது, மனுதாரர் கையும், களவுமாக சிக்கினார்.
ஆகையால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என, குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, மனுதாரர் சுந்தர் மீதான வழக்குக்கு, எவ்வித முகாந்திரமும் இல்லை எனக்கூறி, வழக்கை ரத்து செய்து நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவிட்டார்.