'சேகர்பாபு ஐயப்பன் பக்தர் என்றால் இசைவாணியை கைது செய்யணும்'
'சேகர்பாபு ஐயப்பன் பக்தர் என்றால் இசைவாணியை கைது செய்யணும்'
ADDED : நவ 28, 2024 07:09 AM

திருத்தணி: சேகர்பாபு ஐயப்பனை வணங்கும் உண்மையான பக்தர் என்றால், இசைவாணியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருத்தணியில் அவர் அளித்த பேட்டி: கானா பாடகி இசைவாணி, ஐயப்பன் குறித்து கேவலமான வரிகளோடு பாடல் பாடி, அதை வெளியிட்டுள்ளார். அப்பாடலில் ஹிந்து மதம் மற்றும் ஐயப்பனை இழிவுபடுத்தியுள்ளார்.
மத மோதல் ஏற்பட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடனேயே இப்பாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அப்பாடல், ஹிந்துக்கள் மற்றும் ஐயப்பன் பக்தர்கள் மனதை பெரிய அளவில் புண்படுத்தி இருக்கிறது. இதனால், தமிழகத்தின் பல பகுதிகளிலும் இசைவாணி மீது நடவடிக்கை கோரி, பல்வேறு ஹிந்து அமைப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த விஷயத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருக்கிறார்; அறிவிப்போடு நிறுத்திக்கொள்ளக் கூடாது. ஐயப்பனை வணங்கும் உண்மையான பக்தர் என்றால், இசைவாணியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இசைவாணிக்கு ஆதரவு தெரிவிக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்தையும் கைது செய்ய வேண்டும்.
நடிகை கஸ்துாரிக்கு ஒரு நியாயம்; இசைவாணிக்கு வேறொரு நியாயம் என தமிழக அரசு நடந்து கொள்ளக்கூடாது. சமூக நீதி போராளி ராமதாஸை மோசமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், தன் பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
மஹாராஷ்டிராவில் 'இண்டி' கூட்டணி படுதோல்வி அடைந்ததும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து காங்கிரஸ் தலைவர்களான ராகுலும், கார்கேயும் சந்தேகம் கிளப்புகின்றனர்.
ஜார்க்கண்டிலும், வயநாட்டிலும் காங்., கூட்டணி தான் வெற்றி பெற்றுள்ளது. அங்கே பெற்ற வெற்றிக்கும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை குறை கூறுவரா? உச்ச நீதிமன்றம் கண்டிப்பது போல வெற்றி என்றால் ஓ.கே., தோல்வி என்றால் முறைகேடு என்பது கேவலமான அரசியல். இவ்வாறு அவர் கூறினார்.