'ஆன்மிகம் அதிகமானால் குற்றம் குறையும்; அமைதி ஏற்படும்'
'ஆன்மிகம் அதிகமானால் குற்றம் குறையும்; அமைதி ஏற்படும்'
ADDED : ஜன 02, 2024 06:31 AM

சென்னிமலை: ''ஆன்மிகம் அதிகமானால் குற்றம் குறையும்; வீடுகளில் அமைதி ஏற்படும்,'' என, சிலை கடத்தல் பிரிவு முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறினார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று வேல் யாத்திரை தொடங்கியது. இதில் பங்கேற்ற பொன் மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவிலின் முழு பொறுப்புகளையும் கவனித்து, பூஜைகள் செய்து வரும், 12,000 அர்ச்சகர்களுக்கு, மாதம், 1,000 ரூபாய் கூட சம்பளமாக, அறநிலையத்துறையால் கொடுக்க முடியவில்லை.
ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு எந்த சொத்தும் கிடையாது. 22,600 ஏக்கர் காலி இடத்தில், கடந்த எட்டு மாதத்தில் மட்டும், 151 கோடி ரூபாய் வாடகை பாக்கி உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம், மக்களின் வரிப்பணம் கிடையாது. திருக்கோவிலில் பணியாற்றும் இவர்கள், அரசு ஊழியர் கிடையாது; கோவில் ஊழியர்கள்.
பழமையான, தொன்மையான, 5,000 கோவில்களை புதுப்பிப்பதாக, குடமுழுக்கு செய்ததாக கூறுகின்றனர்; இதில் கமிஷன் அடிக்கின்றனர். திருப்பணி என்ற பெயரில் பழமையான கல்வெட்டுகள் அழிந்து விட்டன.
கோவில் திருப்பணியை, ஹிந்து சமய அறநிலையத்துறை செய்யக்கூடாது. மாநில தொல்பொருள் ஆய்வுத்துறை தான் செய்ய வேண்டும். கோவில்களில் அனைத்தும் செய்பவர்கள் அர்ச்சகர்கள். இவர்களை காப்பாற்றவில்லையேல், கோவில்கள் காலியாகி விடும்.
இன்னும், 15 ஆண்டில், 26,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இருக்க மாட்டார்கள். வசதி இல்லாத, 1,500 ஆண்டுகளுக்கு முன்பான, 10,652 தொன்மையான கோவில்கள் தமிழகத்தில் உள்ளன; அவை கேட்பாரற்று உள்ளன.
கோவிலை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். நான் எந்த சார்பும் இல்லை. மக்களிடையே ஆன்மிகம் அதிகரித்தால், நாடு நன்றாக இருக்கும்; வீடுகள் அமைதியாக இருக்கும்; இல்லையேல் சீரழியும். கடந்த மாதம் கோவில்களில் இருந்து, 28.49 கோடி ரூபாயை எடுத்துள்ளனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறையை கேட்க ஆளில்லாததால், சர்வாதிகாரமாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். 26,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லாத நிலையை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இவர்கள் வெளியேற்றப்பட்டால் கோவில்கள் சூறையாடப்படும்.
என்னைப் போன்றவர்களை அறநிலையத்துறையில் சேர்த்தால், மொத்த அதிகாரிகள், அமைச்சர்களை சிறைக்குள் வைத்து விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

