UPDATED : ஜன 05, 2024 10:39 AM
ADDED : ஜன 05, 2024 07:28 AM

எஸ்.கண்ணம்மா, விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வமும், பழனிசாமியும் ஒருவரை ஒருவர் குறை கூறுவதைக் கேட்டால், வடிவேல் காமெடி தோற்றுப் போகும்; அந்த அளவிற்கு நகைப்பிற்குரியதாக இருக்கிறது. 'முதல்வராக்கிய சசிகலாவையே மூன்று மாதங்களில் வசைபாடியவர் பழனிசாமி. அவர் துரோகி' என்று, பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
'ஜெ.,வின் மறைவுக்கு பின், தன்னை முதல்வராக்கிய சசிகலாவை எதிர்த்து தர்ம யுத்தம் செய்தவர்' என்ற விமர்சனம் பன்னீர்செல்வம் மீது உண்டு. இவர்கள் அ.தி.மு.க., வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும்...
ஜெ., மறைவுக்கு முன், அவரது தோழி சசிகலா அ.தி.மு.க.,வில் உறுப்பினர் மட்டுமே; கட்சி பதவியில் இல்லை. தேர்தலில் நின்று வெற்றி பெறவில்லை. ஆனால், பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தேர்தலில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். இவர்கள், ஜெ.,வின் மறைவுக்கு பின் முதல்வர் பதவி வகித்தது, மக்களின் ஓட்டாலும், ஆதரவாலும் தான். சசிகலா யார், இவர்களை முதல்வர்களாக்க...?
ஜெ.,யின் தோழி; சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றவர் என்பதே சசிகலாவின் இன்றைய அடையாளம். அவரை அரசியல் பக்கம் வர விடாமல், ஒதுக்கி வைத்திருந்தார் ஜெ.,; ஆனால், பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தங்களுக்கு ஆதரவளித்த மக்களை மறந்து, 'சின்னம்மா முதல்வராக்கினார். சின்னம்மாவிற்கு துரோகம் செய்து விட்டார்' என்று கூறுவது, மக்களை அவமதிப்பது போல் உள்ளது.
இவர்கள் பதிலளிக்க வேண்டியது, தேர்ந்தெடுத்த மக்களிடம் தான்; சசிகலாவிடம் அல்ல. எம்.ஜி.ஆர்., - ஜெ., போன்ற ஆளுமைகளால் வளர்ந்த கட்சி இது. எம்.ஜி.ஆர்., மக்களை, 'ரத்தத்தின் ரத்தமே' என்றும், ஜெயலலிதா, 'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்றும் கூறுவார்.
இருவரும் தனி நபர் துதி பாடியது கிடையாது. பன்னீர் செல்வமும், பழனிசாமியும் மாறி மாறி, 'சசிகலாவுக்கு துரோகம் செய்து விட்டார்' என்று புலம்பாமல், உங்களை நம்பி, உங்களுக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்மை செய்ய பாருங்கள்; ஏனெனில், மக்கள் நினைத்தால் மட்டுமே நீங்கள் முதல்வராக முடியும்!