முறைகேடு நடந்தால் லஞ்ச ஒழிப்பு துறையில் பிடித்து கொடுத்து விடுவேன்!: வேளாண் வணிகத்துறை கமிஷனர் எச்சரிக்கை
முறைகேடு நடந்தால் லஞ்ச ஒழிப்பு துறையில் பிடித்து கொடுத்து விடுவேன்!: வேளாண் வணிகத்துறை கமிஷனர் எச்சரிக்கை
UPDATED : டிச 04, 2025 04:55 AM
ADDED : டிச 04, 2025 04:43 AM

சென்னை,: 'வேளாண் வணிகத் துறையில் எந்த முறைகேடு நடந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, லஞ்ச ஒழிப்பு துறையில் பிடித்து கொடுத்து விடுவேன்' என, வேளாண் வணிகத் துறை கமிஷனர் ஆபிரகாம் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில், 284 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும், 13 துணை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் உள்ளன. இங்கு, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், இடைத்தரகர் குறுக்கீடுயின்றி, வேளாண் விளைபொருட்களை வாங்கவும், விற்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இணைப்பு
மத்திய அரசின், 'இ - நாம்' திட்டத்தின் கீழ், முக்கிய சந்தைகளுடன், இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, லாபகரமான விலையில் விவசாயிகள் பொருட்களை விற்று வருகின்றனர். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை, முறைகேடாக வேறு வங்கி கணக்கில் மாற்றி, மோசடி அரங்கேறி வருகிறது.
இதில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு, வேளாண் வணிகத் துறை கமிஷனர் ஆபிரகாம் எச்சரிக்கை விடுத்து, ஆடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது: இ - நாம் கணக்கு வழக்குகளில் நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. இ - நாம் இணையதள விற்பனையை கண்காணிக்க, ஒழுங்குமுறை விற்பனை கூட செயலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
தனிநபர்
விவசாயிகளுக்கு உரிய பணத்தை வியாபாரிகள் வழங்கினரா என்பதை கண்காணிக்கவே, இந்த அனுமதி தரப்பட்டு உள்ளது. ஆனால், வேலுார் மற்றும் பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்த இரண்டு விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணம், பீஹாரில் உள்ள தனிநபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
யார் இந்த வேலையை செய்கின்றனர் என்று தெரியவில்லை. வேளாண் வணிகத் துறையில் இருந்து கொண்டே, அதை சீர்குலைக்கும் நடவடிக்கையில் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுகின்றனர்.
ஜெயங்கொண்டத்தில், 80 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்ததாக, பெரிய வழக்கு நடக்கிறது. இதற்கெல்லாம் அந்தந்த மார்க்கெட்டிங் கமிட்டி செயலர்கள் அல்லது கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் தான் பொறுப்பு.
அதிகாரிகள் விவசாயிகளுக்கு நண்பனாக இருக்க வேண்டும். விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை வேலையை செய்யக் கூடாது. துறையில் எந்த முறைகேடு நடந்தாலும், தொடர்புடையவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். 'சஸ்பெண்ட்' அல்லது 'டிஸ்மிஸ்' செய்யப்படுவர்.
அதுபோன்ற நபர்கள் இந்த துறையில் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் லஞ்ச ஒழிப்பு துறையில் ஒப்படைத்து விடுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

