வெற்றி பெற்றால் நல்ல தேர்தல்; தோற்றால் ஓட்டு திருட்டு என்கின்றனர்!
வெற்றி பெற்றால் நல்ல தேர்தல்; தோற்றால் ஓட்டு திருட்டு என்கின்றனர்!
ADDED : ஆக 30, 2025 08:02 AM

துாத்துக்குடி: 'வெற்றி பெற்றால், நல்ல தேர்தல்; வெற்றி பெறாவிட்டால், ஓட்டு திருட்டு நடப்பதாக சொல்கின்றனர்,' என தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
துாத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி: கடந்த 2006 சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., யாருடனும் கூட்டணி இல்லாமல், தனித்து போட்டியிட்டு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல, 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க., தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். நம் நாட்டில், ஜி.எஸ்.டி.,யால் ஏற்கனவே பாதிப்பு நிலவும் சூழலில், அமெரிக்காவின் 50 சதவீத வரியால், பெரிய பாதிப்பு ஏற்படும். மத்திய அரசு, அமெரிக்காவிடம் பேசி, நம் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற்றால் அது நல்ல தேர்தல் என சொல்கின்றனர். ஆனால், வெற்றி பெற முடியாமல் தோற்றுப்போனால், ஓட்டு திருட்டு நடக்கிறது, என குறை சொல்கின்றனர். தேர்தலில் பல பிரச்னை இருக்கிறது. நாடு முழுதுமே, 100 சதவீதம் சரியான தேர்தல் இன்றுவரை நடக்கவில்லை. நீதித்துறையும், தேர்தல் கமிஷனும், இதை சரிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால், தேர்தலில் நிற்பதே வேஸ்ட்.
கடந்த தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை, தி.மு.க., இன்னும் நிறைவேற்றவில்லை. அடுத்த தேர்தல் வருகிறது என்றவுடன் புதிது, புதிதாக பல அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். கச்சத்தீவை நாம் எப்போது இலங்கைக்கு விட்டுக்கொடுத்தோமோ அப்போதே நம் மீனவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகிவிட்டது. கச்சத்தீவு மீட்பு தான் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு என்பது தே.மு.தி.க.,வின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.