ரூ.500 கோடி கொடுத்து தகவல் தொழில்நுட்பம் கற்று தரச் சொன்னால் பாடத்திட்டத்தையே காணோமே? கொதிக்கின்றனர் தமிழக தலைமை ஆசிரியர்கள்
ரூ.500 கோடி கொடுத்து தகவல் தொழில்நுட்பம் கற்று தரச் சொன்னால் பாடத்திட்டத்தையே காணோமே? கொதிக்கின்றனர் தமிழக தலைமை ஆசிரியர்கள்
UPDATED : பிப் 24, 2025 05:41 AM
ADDED : பிப் 23, 2025 07:20 AM

- நமது நிருபர் -
'ஐ.சி.டி., எனப்படும், 'இன்பர்மேஷன் அண்டு கம்யூனிகேஷன் டெக்னாலஜி' திட்டத்தில், ரூ.500 கோடி ஒதுக்கி ஹைடெக் லேப்களை அமைத்து, பாடம் கற்றுத் தரச் சொன்னால், பாடத்திட்டத்தையே தமிழக அரசு உருவாக்கவில்லை' என அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
'ஆனால், தமிழகத்தில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை அதற்கான பாடத் திட்டமே வகுக்கப் படவில்லை. எஸ்.எஸ்.ஏ., எனப்படும் அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., எனப்படும் இடைநிலை கல்வி திட்டத்தை இணைத்து, பிளஸ் 2 வரை தரமான கல்வி வழங்க, 'சமக்ர சிக்ஷா அபியான்' என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இதில், ஐ.சி.டி., எனப்படும், இன்பர்மேஷன் அண்டு கம்யூனிகேஷன் டெக்னாலஜி திட்டம் துவங்கி, அதன் நோக்கமாக 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி கல்விக்கு, 'ஹைடெக் லேப், இன்டர்நெட், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' அமைப்பது, ஆறாம் வகுப்பு முதலே, கணினி கல்வி கற்றுத்தர நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை வரையறுக்கப்பட்டுள்ளது.
ஹைடெக் லேப்
இதற்கு, 700 மாணவர்கள் வரை உள்ள பள்ளிகளில், 'ஹைடெக் லேப்' அமைக்க, ஒரு பள்ளிக்கு, தலா 6.40 லட்சம் ரூபாய், அதற்கு மேல் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல், 'லேப்' அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன் இன்டர்நெட் கட்டணம் உள்ளிட்ட ஆண்டு பராமரிப்பு, கணினி பயிற்றுநர் சம்பளம் என, ஒரு பள்ளிக்கு, 2.40 லட்சம் ரூபாய் வீதம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், தமிழகத்தில் உள்ள அரசு, அதன் உதவி பெறுபவை என, 6,454 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 'ஹைடெக் லேப்' அமைக்க, 500 கோடி ரூபாய்க்கு மேல், 2022ல் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 'லேப்' அமைக்கப்பட்டது.
வீடியோதான் ஓடுது
ஆனால், தமிழக அரசு பள்ளிகளில் உள்ள இந்த லேப்கள், மாதம் ஒருமுறை படிப்பறிவுத்திறன் சோதித்தல், 'நான் முதல்வர்' வீடியோ பார்த்தல், சினிமா ஒளிபரப்பு, ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி, மொழி ஆய்வகம் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் கணினி கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது.
இருப்பினும், இங்குள்ள, 6,454 பள்ளிகளில், 1,172 கணினி பயிற்றுநர்கள் உள்ளனர். பகுதிநேர பயிற்றுநராக, 763 பேர் உள்ளனர். மீதி, 5,794 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இது குறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதலே, 'ஐ.டி.,' எனும் கணினி கல்வி கற்பிக்கப்படுகிறது.
குறிப்பாக, கணினி பயன்பாடு, மொழி, 'லாஜிக்கல் திங்கிங்' உள்ளிட்ட பலவற்றின் அடிப்படைகள் கற்று தரப்படுகின்றன. ஐ.சி.டி., திட்டத்தில், ஹைடெக் லேப்களை பெற்ற பஞ்சாப், 6,100க்கும் மேற்பட்ட தகுதியான பயிற்றுநர்களை நியமித்து, ஆறாம் வகுப்பு முதல் கணினி கல்வியை வழங்கி வருகிறது. அதேபோல தமிழகத்திலும் கணினி கல்வி பாடத்திட்டம் வகுத்து, 5,000க்கும் மேற்பட்ட கணினி பயிற்றுநர் பணியிடங்களை, மத்திய அரசு நிதியில் நிரப்பி இருந்தால், மாணவர்கள் பயனடைந்திருப்பர்.
மாற்றி விட்டனர்
இங்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும், கணினி அறிவியல் பாடப்புத்தகம் உள்ளது. ஆறு முதல் 10ம் வகுப்பு வரை, பாடத்திட்டமே வகுக்கப்படவில்லை. அதற்கென மாணவர்களுக்கு வகுப்பு நேரங்களும் ஒதுக்கப்படுவதில்லை.
மேலும், அதன் பயன்பாட்டையே திசை மாற்றி விட்டனர். பயிற்றுநர் சம்பளத்தை, திட்ட நிதியில் ஒதுக்கீடு செய்தும், அவர்களை நியமிக்காதது, பாடத்திட்டத்தை உருவாக்காமல் இருப்பது உள்ளிட்டவற்றால், இத்திட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை.
இதனால், அரசு பள்ளிகளிலும் கணினி கல்வி வந்துவிட்டால், தனியார் பள்ளிகளுக்கு வரவேற்பு குறைந்துவிடும் என்ற நோக்கம் காரணமா, என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.