கோஷம் போட்டா வேற மாதிரி ஆகிடும்; மறியலில் ஈடுபட்டோரை எச்சரித்த விருதுநகர் எஸ்.பி.,
கோஷம் போட்டா வேற மாதிரி ஆகிடும்; மறியலில் ஈடுபட்டோரை எச்சரித்த விருதுநகர் எஸ்.பி.,
UPDATED : ஜூலை 04, 2025 01:26 PM
ADDED : ஜூலை 04, 2025 07:39 AM

விருதுநகர்: “மருத்துவமனையில் நீங்கள் மறியல் செய்வதால், -நோயாளிகள் யாரேனும் இறந்து விட்டால் யார் பொறுப்பேற்றுக் கொள்வது,” என விருதுநகர் எஸ்.பி., கண்ணன் கடுமையாக எச்சரித்தார்.
அப்போது, இறந்தவர்களின் உறவினர்கள் கடுமையான வார்த்தைகளை பேசியதை அடுத்து, 'இதற்கு மேல ஒழுங்கா இருக்கணும், இல்லேன்னா வேற மாதிரி ஆகிடும்' என்று அவர் பேசியது, தற்போது சர்ச்சையாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சின்னகாமன்பட்டியில், கோகுலேஷ் பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஜூலை 1ல் வெடிவிபத்து நிகழ்ந்தது.
வெடி விபத்து
இதில், பலியான ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தியின் உடல், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும், மீனம்பட்டி மகாலிங்கம், 55, சூலக்கரை வைரமணி 32, மத்தியசேனை லட்சுமி, 22, அனுப்பன்குளம் செல்லப்பாண்டி, சேர்வைக்காரன்பட்டி ராமஜெயம், 27, நாகபாண்டி, விருதுநகர் புண்ணியமூர்த்தி ஆகியோரின் உடல்கள், விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன.
வெடி விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள், 'பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி, தமிழக அரசு 20 லட்சமும்; ஆலை நிர்வாகம் 10 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும்' எனக்கூறி, அன்று மாலை தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரசு அலுவலர்கள், போலீசார் பேச்சு நடத்தியதால் கலைந்து சென்றனர்.
ஆனால், நேற்று முன்தினம் காலை மீண்டும் மருத்துவமனை வளாகத்தில் திரண்ட உறவினர்கள், கூடுதல் நிவாரணம் கேட்டு உடலை வாங்க மறுத்தனர். அடுத்ததாக, விருதுநகரில் இருந்து மல்லாங்கிணர் செல்லும் ரோட்டில், அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்ட முயன்றவர்களை, போலீசார் கேட்டை பூட்டி தடுத்ததும் வெளியே சென்று மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் எஸ்.பி., கண்ணன், சாத்துார் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் பேச்சு நடத்தினார். எஸ்.பி., கண்ணன் பேசும் போது, “மறியல் செய்வதால் எந்த பயனும் இல்லை, குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய வந்துள்ள அரசு அதிகாரிகளிடம் கோரிக்கையை தெரிவிக்கலாம். மருத்துவமனை வளாகம் என்பதால், மற்ற நோயாளிகளுக்கு இடையூறு ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
அதன் பின் மருத்துவமனை வளாகத்திற்குள், பிரேத பரிசோதனை கூடத்திற்கு அருகே உறவினர்கள் திரண்டனர். அவர்களிடம் அரசு அலுவலர்கள், எஸ்.பி., கண்ணன் கூறுகையில், “இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யாமல் வைத்திருப்பதால் பயன் இல்லை.“அரசு நிவாரணம் அறிவித்துள்ளது; ஆலை நிர்வாகத்திடம் இருந்து உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும். இறந்தவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கைகளை, அரசு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றனர்.
ஆவேசம்
இறந்தவர்களின் உறவினர்கள் போலீசாரிடம், 'நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பவர்களை இழந்துவிட்டு, 5 லட்சம் ரூபாய் தருகிறோம்; உடலை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினால், எடுத்துச் செல்வீர்களா? நீங்கள் உயிரிழந்தால், உங்களின் வீட்டார் உடலை வாங்கிச் செல்வரா' என்றும் ஆவேசமாக கேட்டனர்.
இதையடுத்து, எஸ்.பி., கண்ணன், “இதுபோன்று, 40 நாட்கள் இருந்தாலும் ஒன்றும் மாறப்போவதில்லை. சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. “ரோடு மறியல், நோயாளிகளுக்கு இடையூறு செய்வதால், யாராவது இறந்து விட்டால் யார் பொறுப்பேற்று கொள்வது, மற்றவர்கள் பேச்சை கேட்டு தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம்,” என்றார்.
இந்த தருணத்தில் போலீசாருக்கும், இறந்தவர்களின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், உறவினர்களில் சிலர் தவறான வார்த்தைகளை தெரிவித்ததால் ஆவேசத்தில், 'இதுக்கு மேல ஒழுங்கா இருக்கணும்; கோஷம் போட்டா வேற மாதிரி ஆகிடும்' என எஸ்.பி., எச்சரித்தார். அவரின் இந்தப் பேச்சு தான், சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.