இலவச அரிசிக்கு பதில் பெண்களுக்கு நிலம் கொடுத்தால் வளர்வர்: சிவகாமி வலியுறுத்தல்
இலவச அரிசிக்கு பதில் பெண்களுக்கு நிலம் கொடுத்தால் வளர்வர்: சிவகாமி வலியுறுத்தல்
ADDED : மார் 16, 2025 01:47 AM

சென்னை: ''நிலமற்ற விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு, இரண்டு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த மக்களுக்கான நிலக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்,'' என, அகில இந்திய பெண் சிந்தனையாளர் களத்தின் அமைப்பாளர் சிவகாமி பேசினார்.
அகில இந்திய பெண் சிந்தனையாளர் களம் மற்றும், 'புதிய கோடங்கி' மாத இதழ் சார்பில், நிலம் மற்றும் அரசியல் குறித்த மாநாடு, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது.
அதில், சிவகாமி பேசியதாவது:
தமிழகத்தில், 44 சதவீத பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இலவச அரிசி வழங்குவதற்கு நிறைய பணம் செலவிடுகின்றனர். அந்த பணத்தில், பெண்களுக்கு நிலம் வழங்கினால், அவர்களது திறன், வளர்ச்சி மேம்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாயிலாக, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நிலங்களில் பெண்களுக்கு, 20 சதவீதத்திற்கும் மேல் வழங்க, அரசு முன்வர வேண்டும். பெண்களுக்கு நில உரிமை இருப்பதில்லை. நிலத்தை தக்கவைத்துக் கொள்ளும் கருவியாக மட்டுமே, பெண்களை பயன்படுத்துகின்றனர்.
கடந்த 1961ம் ஆண்டு கொண்டு வந்த நில சீர்திருத்த சட்டப்படி, ஐந்து பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு, 30 ஏக்கர் நிலம் வரை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். அன்றையச் சூழலில், பெரிய குடும்பங்கள் இருந்தன. இன்றைக்கு குடும்ப உறுப்பினர்கள் குறைந்துள்ள நிலையில், அந்த நில அளவை குறைத்து, சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்கவே, இந்த முறை கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்றளவிலும், பெண்கள் பெயரிலோ, தலித்துகளுக்கோ நிலம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
நிலக் கொள்கை வேண்டும்
நிலமற்ற விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு, இரண்டு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். காடுகள், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் எனில், அதற்கு நிலம் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த மக்களுக்கான நிலக் கொள்கை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு பேசுகையில், ''ஆதிவாசி மக்களின் நில உரிமைகள், வரலாறு அடிப்படையில் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. இங்கு மட்டுமல்ல, உலகளவில் இதே நிலைதான். இது ஒரு வகையான மனப்பாங்கு,'' என்றார்.
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேசுகையில், ''சமத்துவத்தை ஒரு மொழியாக பார்க்க வேண்டும். அதை நாம் புரிந்து கொள்ளவில்லை எனில், அந்த மொழியை நாம் ஒதுக்குகிறோம் என்று பொருள்.
நிலம் என்பது, மக்களின் வாழ்க்கையோடு, இயற்கையோடு பின்னிப்பிணைந்தது. பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ள நில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்,'' என்றார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூர்ணலிங்கம், நிலம் குறித்த ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். 30க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.