இங்க இருந்தா தலைவராகலாம் அங்க போனா வேலைக்காரனாகணும்: காங்., பொறுப்பாளர் பேட்டி
இங்க இருந்தா தலைவராகலாம் அங்க போனா வேலைக்காரனாகணும்: காங்., பொறுப்பாளர் பேட்டி
UPDATED : பிப் 23, 2024 05:51 AM
ADDED : பிப் 23, 2024 05:40 AM

சென்னை ;காங்கிரஸ் கட்சியின் லோக்சபா தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். மேலிட பொறுப்பாளர்கள் அஜோய்குமார், ஸ்ரீவல்லபிரசாத், முன்னாள் தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் அளித்த பேட்டி:கடந்த 10 ஆண்டுகளில், ஜனநாயகத்திற்கு பா.ஜ., முடிவுரை எழுதி வருகிறது. நாட்டில் விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள், தங்களது அலுவலகத்தை பா.ஜ., அலுவலகமாக மாற்றிவிட்டன. தமிழகத்திலுள்ள கோவில்களுக்கு செல்ல முடிந்த பிரதமர் மோடிக்கு, மணிப்பூர் ஏன் செல்ல
முடியவில்லை? அங்கிருக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறாதது ஏன்? தமிழக மக்களை நான் நம்புகிறேன்.
பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., கொள்கைக்கு சரியான பதிலடியை தமிழகத்தில் கொடுத்து வருகின்றனர். காங்கிரசில் உள்ள பிரச்னைகளுக்கு பேசி தீர்வு காணலாம். கட்சி மாறும் மனநிலையில் இருப்போருக்கு முக்கியமாக ஒன்றைக் கூறுகிறேன். காங்கிரசில் இருக்கும் வரை யாரும் தலைவராக ஆகலாம்; பா.ஜ.,விற்கு சென்றால் வேலைக்காரனாகத் தான் இருக்க வேண்டும். இதை அனைவரும் புரிந்து கொள்ள வெண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாநகராட்சியின், 92வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் திலகர் மற்றும் பல்லடம் நகராட்சி பா.ஜ.,கவுன்சிலர் ஈஸ்வரி ஆகியோர் காங்கிரசில்
இணைந்தனர்.